Home FamilyChapter 38

Chapter 38

by Siragugal Novels
17 views

முக்கிய நிர்வாகிகள் அனைவரையும் அறிமுகப்படுத்திய பின் ஆர்யன் சஞ்சுவை அறிமுகம் செய்ய அவளை அருகில் அழைத்தான். ஆர்யன் அல்லது சஞ்சு பேச ஆரம்பிப்பதற்குள் மாயா ஒரு மெல்லிய புன்னகையுடன் குறுக்கிட்டு, ” அப்பா, இவங்க தான் சஞ்சனா, ஆர்யனோட PA ” என்று சட்டென சொன்னாள்.

ஆர்யன் கோவத்தில் தாடையைக் கடித்துக் கொண்டான், ஆனால் சஞ்சு மெதுவாக அவனை அமைதியாக இருக்கும்படி சைகை செய்தாள்.

சந்திரசேகர் சஞ்சுவைப் பார்த்து அன்புடன் புன்னகைத்து, ” ஒஹ், உங்கள சந்திச்சதுல ரொம்ப சந்தோஷம், அப்புறம் நீங்க ரொம்ப  அழகா இருக்கீங்க.” என்று சொன்னார். அவர் அதற்கு சஞ்சு அவரை பார்த்து, “ ரொம்ப நன்றி சார் “ என்று பணிவுடன் சொன்னாள்.

“ உங்க எல்லாருக்கும் என்னோட வாழ்த்துக்கள், ஆர்யன் உண்மையிலேயே ஒரு நல்ல திறமையான டீம் தான் கூட வெச்சுருக்கான். ஆர்யன் வாழ்க்கையில நீங்க எல்லாரும் ரொம்ப முக்கியமான, நம்பகமான ஆளுங்க அதனால உங்க முன்னாடி நான் ஆர்யன் கிட்ட ஒரு கோரிக்க வைக்க போறேன். ஆர்யன் நிச்சயம் மறுக்க மாட்டான்னு நம்புறேன் “ என்று சொன்ன சந்திரசேகர் ஆர்யன் பக்கம் திரும்பி, ” ஆமா ஆர்யன், நம் உறவை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போக நான் விரும்புறேன். உனக்கு சம்மதமா ? நான் ரொம்ப சந்தோஷப்படுவேன் “ என்று கூறினார்..

சந்திரசேகரின் வார்த்தையை கேட்டதும் சஞ்சுவின் இதயம் நொறுங்கியது.

“ இல்ல, ஆர்யன் சம்மதம் சொல்றத என்னால கேட்க முடியாது.  ஒருவேளை நாம ஒன்னா இருக்க விதி இல்ல போல. என்ன மன்னிச்சிடுங்க ஆர்யன், என் முன்னாடி அவருக்கு சம்மதம் சொல்ல உங்களுக்கு கஷ்டமா இருக்கும்னு எனக்குத் தெரியும். நான் கிளம்புறது தான் நல்லது “ என்று நினைத்தபடி மனமுடைந்து, கண்களில் கண்ணீர் துளிர்க்க சஞ்சு மெல்ல திரும்பி நடந்தாள். அவள் முகத்தைக் கவனித்த பவித்ரா சட்டென்று அவளைப் பின்தொடர்ந்தாள். தன் திட்டம் வேலை செய்வதைக் கவனித்த மாயா, அவர்களுக்குப் பின்னால் நடந்து அறைக்கு வெளியே சென்று, “ ஏய்! நில்லு “ என்று சொல்லி சஞ்சுவை நிறுத்தினாள்.

சஞ்சு நின்று அவளைப் பார்த்த போது, “நான் உன்ன பின்வாங்கச் சொன்னேன் ஆனா நீ கேட்கல, இப்போ பார்த்தியா என்ன ஆச்சுனு ? ஆர்யன் என் அப்பா வார்த்தைக்கு மறுவார்த்த பேச மாட்டாரு. ஆர்யன் வீட்டுக்கு வர்றதுக்கு முன்னாடி உன் சாமான காலி பண்ணிட்டு கிளம்பு ” என்று ஏளனமாக சொன்னாள் மாயா.

சஞ்சு அணிந்திருந்த கவுனை அலட்சியமாகப் பார்த்த மாயா ” அப்போ இது தான் ஆர்யன் உனக்காகவே பிரத்யேகமா டிசைன் பண்ணின காஸ்ட்யூமா ? இத மேன்ஷனுக்கு வெளியே விட்டுட்டு போ. இன்னைக்கு நைட்டு நான் ஆர்யன் வாழ்க்கையில நுழையும் போது இதை எரிப்பேன். இப்போ வெளிய போ.” என்று சீறினாள்.

சஞ்சு பதில் சொல்லாமல் கண்ணீர் கன்னங்களில் வழிந்தோட நடந்து சென்றாள். பவித்ரா அவள் பின்னால் ஓடினாள்.

” சஞ்சு, நில்லு, எங்க போற ? அவ ஏன் உன்கிட்ட இப்படி பேசுறா ? நீ ஏன் பதில் எதுவும் சொல்லாமா இருந்த ?” என்று பவித்ரா கேள்வி மேல் கேள்வி கேட்டு அவளை தடுத்து நிறுத்தினாள்.

” பவி, என்ன உன் வீட்டுக்கு கூட்டிட்டு போ” என்றாள் சஞ்சு அமைதியாக. அதை கேட்ட பவித்ரா, ” உனக்குப் புத்தி பேதலிச்சு போச்சா ? நான் இப்பவே ஆர்யன் சார கூப்பிடறேன் ” என்றாள். ஆனால் சஞ்சு அவளை தடுத்து, ” ப்ளீஸ் பவி. நீ என்ன கூட்டிட்டு போ இல்ல நான் வேற எங்கயாச்சும் போறேன். தயவு செஞ்சு என்ன தடுக்காத.” என்று கெஞ்சினாள்.

சஞ்சு உடைந்து போவதைக் கண்ட பவித்ரா, ” சரி, ஆனா நீ அழறத நிறுத்து. வா போகலாம். நான் என் காரை எடுத்துட்டு வரேன்.” என்று கூறினாள்.

பவித்ரா காரை எடுத்து வர, இருவரும் கிளம்பி சென்றனர். அப்போது சஞ்சுவைத் தேடி வந்த ரஞ்சித், அவர்கள் செல்வதைப் பார்த்து  உடனே காவலர்களை அழைத்து, ” பவித்ராவோட கார follow பண்ணுங்க. அவங்க போற இடத்த எனக்குத் தெரியப்படுத்துங்க” என்று உத்தரவிட்டான். பின்னர் பார்ட்டி அறைக்கு செல்ல திரும்பிய போது எதிரே வந்து கொண்டிருந்த ஆர்யன் மீது மோதினான்.

” சஞ்சு எங்க ?” என்று ஆர்யன் கேட்டதும், ” சார், அவ இப்ப தான் பவித்ரா கூட கிளம்பி போனா. கார்ட்ஸ் அவங்கள follow சொல்லி இருக்கேன் “ என்று ரஞ்சித் பதில் சொன்னான்.

” பார்ட்டி முடிஞ்சுடுச்சுனு எல்லார்கிட்டயும் சொல்லு. எல்லாரையும் கவனிச்சுக்க. யாராவது என்ன கேட்டா, நான் அவசர வேலையா கிளபிட்டேன்னு சொல்லு “ என்று சொன்ன ஆர்யன், “என்னோட காரை கொண்டு வா, பவித்ராவோட லொகேஷன் மெசேஜ் பண்ணு ” என்று பதற்றத்தோடு கூறினான்.

ரஞ்சித் சரி என்று தலையசைத்து, சில நிமிடங்களில் ஆர்யன் காரை ஓட்டி வந்தான். சஞ்சுவின் இருப்பிடம் ஆர்யனின் மொபைலுக்கு ரஞ்சித் அனுப்பினான். பின்னர் பார்ட்டி அறைக்கு சென்று விருந்தினர்களை மரியாதையுடன் வழியனுப்புவதை ரஞ்சித் உறுதி செய்தான்.

” ரஞ்சித், ஆர்யன் எங்க ?” என்று சந்திரசேகர் கேட்டதும், ” எங்க சைட்ல ஒரு எமர்ஜென்ஸி சார். ஆர்யன் சார் உடனடியா கிளம்பி வேண்டியதா போச்சு. பார்ட்டி முடியுற வர இருக்க முடியாததுக்கு வருத்தப்பாட்டாரு “ என்று சொன்னான் ரஞ்சித்.

” பரவாயில்ல, நான் அவன் கிட்ட அப்புறம் பேசுறேன்” என்று சந்திரசேகர் பதிலளித்தார். அதன் பின்னர் மாயாவும் அவள் அப்பாவும் காரில் கிளம்பினார்கள்.

“அப்பா, ஆர்யன் கிட்ட என்ன பேசினீங்க ?” என்று மாயா பொறுமையிழந்து கேட்டாள். அதற்கு சந்திரசேகர், “காலையில சொல்றேன்.” என்றார்.

” அவரோட PAவ பார்த்தீங்களா ? ஆர்யன் என்ன ஏறெடுத்து கூட  பார்க்காததுக்கு அவ தான் காரணம்.” என்று மாயா எரிச்சலுடன் சொன்னாள். அதற்கு சந்திரசேகர், ” எல்லாத்தையும் செட்டில் பண்ணிடுவோம். அமைதியாக இரு” என்றார்.

” நான் உங்கள தான் நம்புறேன், பா.” என்று சொல்லி மாயா அமைதியானாள்.

இதற்கிடையில், பவித்ராவும் சஞ்சுவும் பவித்ராவின் வீட்டை அடைந்தனர். சஞ்சு ஒரு நொடி கூட அழுகையை நிறுத்தவில்லை, ஒவ்வொரு மூச்சிலும் அவள் தோள்கள் நடுங்கின.

” சஞ்சு, என்ன நடந்துச்சு ? ஏன் இப்படி அழற ?” என்று கேட்டு பவித்ரா அவளை மெதுவாக உள்ளே அழைத்துச் சென்றாள். சஞ்சு கண்ணீரைத் துடைத்துக் கொண்டு, “ சந்திரசேகர் சார், ஆர்யன் கிட்ட கல்யாணத்த பத்தி பேசி இருக்காரு “ என்று சொல்லி உடைந்து போனாள். அதை கேட்டதும், “என்ன?” என்று பவித்ரா அதிர்ச்சியில் மூச்சிரைத்தாள்.

” ப்ளீஸ் பவி, நான் இங்கேயே இருக்கேன். இதுக்கு மேல என்கிட்ட எதுவும் கேட்காத ” என்று சஞ்சு கெஞ்சினாள். அதற்கு பவி, “ என்ன பேசிட்டு இருக்க நீ ? சரி வா, என் கூட ரூம்ல இரு “ என்று அவளை அழைத்தாள் ஆனால் சஞ்சு மறுத்து, “ இல்ல நான் தனியா இருக்க விரும்புறேன்,” என்று முணுமுணுத்தாள்.

பவித்ரா பெருமூச்சு விட்டாள், அவளை மேலும் வற்புறுத்துவதில்  அர்த்தமில்லை என்பதைப் புரிந்துகொண்டு, ” சரி, இன்னொரு ரூம் இருக்கு. நீங்க அங்கேயே தங்கிக்கலாம்.” என்று சொன்னாள்.

மறுவார்த்தை பேசாமல் சஞ்சு அறைக்குச் சென்று கதவைச் சாத்தித் தாழிட்டு, கதவில் சாய்ந்து மீண்டும் கண்ணீர் விட்டாள்.

” ஆர்யன்… அவரோட ப்ரொபோசல் நீங்க ஏத்துக்கிட்டீங்களா? எனக்கு யாருமே இல்ல ஆர்யன், நான் தனியா இருக்கேன் “ என்று உடைந்த குரலில் கஅழுதாள்.

சிறிது நேரத்தில் வாசல் அழைப்பு மணி ஒலித்ததும், பவித்ரா கதவைத் திறந்து பார்த்த போது அங்கே ஆர்யன் பதற்றத்துடனும் அமைதியின்றியும் நிற்பதைக் கண்டாள்.

“சார்… ப்ளீஸ் உள்ள வாங்க ” என்று அவனை அழைத்தாள். உள்ளே நுழைந்த ஆர்யன், “சஞ்சு எங்க?” என்று அவசரமாக கேட்டான்.

“அவ ரூம்ல இருக்கா. நாங்க பார்ட்டியில இருந்து கிளம்பினதுல இருந்து அழுதுட்டே இருக்கா. நான் சொல்ற எதையும் அவ காது கொடுத்து கேட்க மாட்டேங்குறா.” என்று பவித்ரா சொல்ல, “நான் பார்த்துக்கறேன்” என்று சொல்லிவிட்டு அறையை நோக்கி நடந்தான் ஆர்யன்.

“சார்… அவ மனசு உடைஞ்சு இருக்கா …அப்புறம்…. ” என்று பவித்ரா ஆரம்பித்ததும், ” அப்புறம் என்ன?” என்று கேட்டு ஆர்யன் சட்டென்று திரும்பினான்.

” மாயா… அவ கிட்ட ரொம்ப கடுமையா நடந்துகிட்டா “ என்று பவித்ரா குரலைத் தாழ்த்தி பார்ட்டி அறைக்கு வெளியே மாயா சொன்ன அனைத்தையும் ஆர்யனிடம் கூறினாள். அதை கேட்டதும்  ஆர்யனின் தாடை இறுகியது, அவன் கண்களில் கோபம் மெல்ல எழுந்து, அவன் கைகள் முஷ்டியை மடக்கின.

” சஞ்சு ஏற்கனவே ரொம்ப உடைஞ்சு போய் இருக்கா ” என்று பவி மெல்லிய குரலில் சொன்னதும், ” கவலைப்படாதீங்க, அவள நான் பாத்துக்குறேன் “ என்று ஆர்யன் பதில் சொல்லி அறைக் கதவை பலமாகத் தட்டி, “சஞ்சு, கதவைத் திற.” என்றான் ஆனால் அவள் எந்த பதிலும் சொல்லவில்லை.

ஆர்யன் மீண்டும் பலமாகத் தட்டி, ” சஞ்சு, ப்ளீஸ்டி கொஞ்சம் கதவ திற, எனக்கு உன்ன பார்க்கணும் “ என்று கெஞ்சினான் அப்போது,  “திரும்பிப் போங்க மிஸ்டர் சைதன்யா.” என்று உள்ளேயிருந்து அவளுடைய மெல்லிய குரல் குளிர்ச்சியாகவும் தொலைவாகவும் கேட்டது.

ஆர்யன் திகைத்து உறைந்து போனான். ” என்ன ? மறுபடியும் சைதன்யாவா ? என்னடி உனக்கு இப்போ பிரச்சன ?  முதல்ல கதவ திற அப்புறம் இருக்கு உனக்கு “ என்று அவளை மிரட்டினான். அதற்கு சஞ்சு, “ முடியாது, நீ இங்க இருந்து போ “ என்று சொன்னாள்.

“சஞ்சு, நான் ஏற்கனவே கடுப்புல இருக்கேன், நீ இன்னும் கோவப்படுத்தாத, கதவைத் திற.” என்று ஆர்யன் கத்தினான் அதற்கும், “ முடியாது “ என்றாள் சஞ்சு. 

ஆர்யன், பவித்ராவை நோக்கித் திரும்பி, ” இந்த ரூம் சாவி கொடுங்க பவித்ரா “ என்று கேட்டான். அவளும் உடனே அவனிடம் சாவியை கொடுத்தாள்.  

ஆர்யன் கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்த போது அவன்  கண்ட காட்சி அவன் மனதை உடைத்தது.

சஞ்சு தரையில் உட்கார்ந்தாள், முழங்கால்களை மார்பு வரை இழுத்து, தலையை கட்டிலின் பக்கவாட்டில் சாய்த்திருந்தாள். அவளுடைய முகம் கண்ணிரில் நிரம்பியிருந்தது. அவளுடைய உடல் முழுவதும் விம்மல்களால் நடுங்கியது.

ஆர்யன் மெல்ல கதவை சாத்திவிட்டு அவளருகில் மண்டியிட்டு அமர்ந்து, “சஞ்சு… வா வீட்டுக்குப் போகலாம்” என்று மெல்லிய குரலில் கூறி அமைதியாக இருக்க முயன்றான். ஆனால் சஞ்சு அவனிடம், ” இல்ல. நான் வரமாட்டேன்” என்று சொன்னாள்.

” ஸ்வீட் ஹார்ட், ப்ளீஸ். வா கிளம்பலாம்.” என்று ஆர்யன் மீண்டும் அவளை அழைக்க, அவளும் பிடிவாதமாக, ” மாட்டேன் “ என்றாள்.

ஆர்யன் தாடையைக் கடித்துக் கொண்டு மறுவார்த்தை பேசாமல் குனிந்து தன் இரு கரங்களால் அவளை தூக்கிக் கொண்டான். சஞ்சு சட்டென அவன் நெஞ்சில் பலமாக அடித்தபடி போராடி இறங்க முயன்றாள்.

“சஞ்சு, அமைதியா இரு” என்றவன் அவளை சமாதானப்படுத்த முயன்றான். ஆனால் சஞ்சு, “என்னை விடுடா ” என்று அவன் பிடியில் நெளிந்து கொண்டே இருந்தாள்.

” முடியாதுடி, இப்போ அமைதியா வா “ என்று ஆர்யன் பற்களை கடித்துக் கொண்டு சொன்னான். 

” இப்போ நீ என்ன விட போறியா இல்லையா ? “ என்று சஞ்சு மீண்டும் அவனை கேட்க, இந்த முறை ஆர்யன் பேசுவதற்கு பதிலாக குனிந்து அவள் உதடுகளை மெல்ல, ஆழமாக, மூர்க்கமாக   முத்தமிட்டான். ஒரு வழியாக அவன் முத்தமிடுவதை நிறுத்தியதும்  சஞ்சு திகைத்துப் போய் மூச்சிரைக்க அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

” இப்படியே அமைதியா வா இல்ல யார பத்தியும் கவலைப்பட மாட்டேன், எல்லார் முன்னாடியும் கிஸ் பண்ணுவேன் “ என்று ஆர்யன் அவள் உதடுகளில் கிசுகிசுத்தான், அவனது பார்வை தீவிரமாகவும் அசைக்கப்படாமலும் இருந்தது.

ஆர்யன் சஞ்சுவை கைகளில் தூக்கிக்கொண்டு அறையை விட்டு வெளியே வந்தவுடன், பவித்ரா ஹாலில் அமர்ந்து காத்திருப்பதைக் கண்டனர். அவர்களைப் பார்த்ததும் அவள் சத்தமாக சிரித்தாள்.

” நன்றி பவித்ரா. நாங்க கிளம்பறோம்” என்று ஆர்யன் சொல்ல, “சரிங்க சார். பை சஞ்சு” என்று சிரித்தபடி அவளைப் பார்த்து கண்ணடித்தாள் பவித்ரா.

“பை” என்று எரிச்சலான முகத்துடன் சஞ்சு முணுமுணுக்க, பவித்ராவின் சிரிப்பு இன்னும் சத்தமாக ஒலித்தது.

ஆர்யன் அவளை தூக்கிச் சென்று லிப்டுக்காக அவர்கள் காத்திருந்தபோது, சஞ்சு அவனை நிமிர்ந்து பார்த்து, ” என்ன இறக்கி விடு. நான் நடந்து வரேன்.” என்றாள் கோவமாக.

” இப்போ நான் உன்ன தூக்கிட்டு வர்ரதுல உனக்கு என்ன  பிரச்சனை?” என்று ஆர்யன் புருவங்களை உயர்த்தி கேட்டான். அதற்கு சஞ்சு உடனே, ” ஒன்னும் வேணாம், என்னால நடக்க முடியும்.” என்று சொல்லி அவன் பதிலுக்குக் காத்திராமல், அவன் கைகளிலிருந்து குதித்து அவனருகே நின்று கைகளைக் கட்டிக்கொண்டாள்.

” வரவர உனக்கு சேட்ட அதிகம் ஆயிடுச்சு “ என்று ஆர்யன் முணுமுணுத்தான். விரைவில், அவர்கள் பார்க்கிங்கை அடைந்து காரில் யாரியதும் ஆர்யன் காரை ஓட்டத் தொடங்கினான். ஒரு கனத்த மௌனம் அவர்களுக்கிடையில் பல நிமிடங்களுக்கு நிலைத்தது.

” என்ன மேடம் பேச மாட்டீங்களா ? என்று கேட்டு மௌனத்தை உடைத்தான் ஆர்யன். அதற்கு சஞ்சு உடனே, “நான் ஏன் இப்போ  பேசனும் ? அதான் சார் கூட பேச இப்போ புதுசா ஆள் வந்தாச்சுல “ என்று சொல்லி முகம் சுளித்தாள்.

“ என்ன லூசு மாதிரி பேசுற ? “ என்ற ஆர்யன் சட்டென கேட்டதும், “ ஒஹ் இப்போ நான் லூசு மாதிரி தெரியுறேனா ? “ என்று கேட்டாள் சஞ்சு.

” அய்யோ கடவுளே, சஞ்சு மா .” என விரக்தியடைந்த ஆர்யன் பெருமூச்சுடன் திடீரென காரை நிறுத்திவிட்டு சீட் பெல்ட்டை கழற்றினான். பின்னர் அவளை நோக்கித் திரும்பி, ” என்ன பாரு ” என்று உறுதியாகச் சொன்னான். ஆனால் சஞ்சு, ” அப்படியே பேசலாம், நான் கேட்டுட்டு தான் இருக்கேன் “ என்றாள்.

” ரொம்ப வருத்தப்படுவ “ என்று ஆர்யன் சொன்னதும், அவன் பக்கம் திரும்பி, “ என்ன சொல்லு “ என்று கேட்டாள்.

” சந்திரசேகர் சார், எங்க உறவ அடுத்த கட்டத்துக்கு கொண்டு போகணும்னு கேட்டாரு, நானும் சம்மதம் சொல்லிட்டேன் “ என்று ஆர்யன் சொன்னதும், சஞ்சுவின் கண்கள் அகல விரிந்து கண்ணீர் பெருக்கெடுத்தது.

” அப்போ நீ சம்மதம் சொல்லிட்டியா ? நான் இப்படியே நடு ரோடுல போறேன், நீ போ பா, உன்னோட புது உருவுல கவனம் செலுத்து “ என்று புலம்ப ஆரம்பித்தாள் சஞ்சு. ஆர்யன் அவளை தன்னருகே இழுத்து முத்தமிட்டான். சஞ்சு திகைத்து உறைந்து போனாள். பிறகு மெல்ல பின் வாங்கி அவளது கண்ணீர் வழிந்த கண்களில் முத்தமிட்டு அவள் கண்ணீரை தன் கட்டை விரலால் துடைத்தான்.

” எப்போ தான்டி என்ன நம்புவ ? “ என்று ஆர்யன் வருத்ததுடன் கேட்க, ” நான் உன்ன நம்பலனு யார் சொன்னது?” அவள் நடுங்கியபடி கிசுகிசுத்தாள்.

” அப்போ மேடம் ஏன் இப்படி இருக்கீங்க ?” என்று ஆர்யன் கேட்க, ” எனக்கு தெரியல “ என்று குரல் நடுங்க பதில் சொன்னாள் சஞ்சு.

” இப்போ நான் சொல்றத கேளு, சந்திரசேகர் சார் எங்க உறவ அடுத்த கட்டத்துக்கு கொண்டு போகணும்னு பேச ஆரம்பிச்சதும் நான் உடனே அவர பேச விடாம ஒரு பார்ட்னர்ஷிப் டீல் பத்தி பேசினேன் அதனால எங்க உறவு அடுத்த கட்டதுக்கு போகும் ஆனா வெறும் பிசினஸ் பார்ட்னரா மட்டும் தான். அவர நான் எதுவும் பேசவே விடல அதனால கல்யாணத்த பத்தி யாரும் எதுவும் பேசல. ஒருவேள அவர் பேசி இருந்தாலும், நான் உன்ன பத்தி அவர் கிட்ட சொல்லி இருப்பேன் “ என்று ஆர்யன் உறுதியாக கூறினான்.

அவன் வார்த்தைகளை கேட்ட சஞ்சு, “அவர் கிட்ட என்ன சொல்லி இருப்ப ?” என்று மெல்லிய குரலில் கேட்டாள். அதற்கு ஆர்யன் மெல்லிய புன்னகையுடன் “அது, இன்னும் கொஞ்ச நேரத்துல உனக்கே தெரியும், இப்போ நாம போகலாம் “ என்று ஒரு புன்னகையோடு சொன்னான்.

ஆர்யன் காரை ஸ்டார்ட் செய்து காரை மீண்டும் ஓட்டத் தொடங்கினான். சில நிமிடங்களுக்குப் பிறகு, பழக்கமில்லாத பாதையில் அவர்கள் செல்வதை பார்த்து, “ இது என்ன வழி ? நாம எங்க போறோம் ? “ என்று அவனிடம் கேட்டாள்.

” நான் உன்ன கடத்திட்டு போறேன். இவ்ளோ நாள் உன்ன விட்டு வெச்சு பெரிய தப்பு பண்ணிட்டேன், இனிமே உன்ன விட முடியாது “ என்று சொன்ன போது ஆர்யனின் குரலில் ஒரு வித்தியாசம் இருந்தது. அதை கவனித்த சஞ்சு, “ என்ன செய்யப் போற ?” என்று தயங்கியபடி கேட்டாள்.

ஆர்யன் அவளை ஒரு பார்வை பார்த்தான், அவன் உதடுகளின் ஓரத்தில் ஒரு விளையாட்டுத்தனமான புன்னகை தழுவ, ” என்ன வேணும்னாலும் செய்வேன், கொஞ்சம் பொறுத்திருந்து பாரு “ என்று சொன்னான்.

மீண்டும் சுற்றுமுற்றும் பார்த்த போது சஞ்சுவின் கண்கள் விரிந்தன. “ இது நம்ம பீச் ஹவுஸுக்குப் போற வழி மாதிரி தெரியுது…” என்று சஞ்சு கேட்க, “ஹ்ம்ம் ஆமா, அங்க தான் போறோம் “ என்று பதில் சொன்னான் ஆர்யன்.

அதை கேட்டதும் அவள் சட்டென அவன் பக்கம் திரும்பி, ” இப்போ நாம ஏன் அங்க போறோம்?” என்று கேட்டாள், அதற்கு ஆர்யன், நாம அங்க போன அப்புறம் உனக்கே தெரியும் “ என்று பதில் சொன்னான். 

” ஏன், இப்போவே சொன்னா என்னவாம் உனக்கு ? “ என்று சஞ்சு அவனை முறைத்தபடி கேட்க, “ ஏன் மேடம் வெயிட் பண்ண மாட்டீங்களா ? “ என்று அவனும் பதிலுக்கு கிண்டல் செய்தான்.

***********************************************

முன்னோட்டம்:

” சஞ்சு ஸ்வீட் ஹார்ட், இத உன் கிட்ட சொல்ல சரியான நேரத்துக்காக சுமார் ஒரு வருஷத்துக்கு மேல வெயிட் பண்ணிட்டு இருந்தேன். இதுக்கு மேல வெயிட் பண்ண முடியாது. நம்ம வாழ்க்கையில ஒரே இடத்த நாம அடைஞ்சு இருக்கோம். சஞ்சனா…ஐ லவ் யூ. என் கடைசி மூச்சு இருக்க வரை நீ என் காதலா, என் உயிரா இருக்கனும்னு நான் விரும்புறேன். நீ என்ன லவ் பண்ணுவியா ? எப்பவும் என்னோட சஞ்சனாவா இருப்பியா ? ஐ லவ் யூ பேபி “

 

You may also like

1 comment

Leave a Comment

Latest Posts

error: Content is protected !!