சஞ்சனா இனி ஆர்யனின் PAவாக இருக்க மாட்டாள் என்ற சந்திரசேகரின் நிபந்தனையை ஆர்யன் ஏற்றுக்கொண்டதும் முகம் முழுக்க பதற்றத்துடன் அருகில் நின்றான் ரஞ்சித்.
இதற்கிடையில், மாயா தனது தந்தைக்கு ஒரு கோப்பையில் பானத்துடன் திரும்பினாள். சந்திரசேகருக்கு ஒரு அழைப்பு வந்ததும் அவர் எழுந்து தோட்டத்துக்கு சென்றார். சஞ்சனாவையும், நரேனையும் நெருங்கி, மொபைலில் தனது உரையாடலை முடித்துவிட்டு அவர்கள் பக்கம் திரும்பினார்.
” நரேன், மாயா ட்ரிங்க்ஸ் ஏற்பாடு பண்ணி இருக்கா, போய் ரஞ்சித், ஆர்யனுக்கு கம்பெனி கொடு” என்று சந்திரசேகர் சொன்னதும், ” கண்டிப்பா பா” என்று அவரிடம் பதில் சொன்ன நரேன், “ வா சஞ்சனா போகலாம்.” என்று அவளை அழைத்தான். அப்போது அவனை குறுக்கிட்ட சந்திரசேகர், “நரேன், நீ முன்னாடி போ. சஞ்சனா கொஞ்ச நேரத்துல வந்துடுவா ” என்று கூறினார்.
நரேன் கிளம்பும் முன் தன் அப்பாவைக் கூர்மையான பார்வையால் முறைத்து விட்டு லிவிங் அறைக்கு சென்று மாயாவின் இடைவிடாத நகர்வுகளை மௌனமாக சகித்துக் கொண்டிருந்த ஆர்யனின் அருகில் அமர்ந்தான்.
” என்ன ஆர்யன், நீ ட்ரிங்க்ஸ் குடிக்கலையா?” என்று நரேன் கேட்டதும், ” இல்ல, நான் இப்போ குடிக்குறது இல்ல, விட்டுட்டேன் ” என்று ஆர்யன் பதிலளித்தான்.
“உன்கிட்ட நிறைய நல்ல மாற்றங்கள் பாக்குறேன்டா “ என்று நரேன் சொல்ல, மாயா குறுக்கிட்டு, “ஆர்யன், நீங்க தேவையில்லாத விஷயங்களுக்காக உங்க சுய மதிப்ப வீணா இழக்குறீங்கனு நினைக்குறேன். நம்மள மாதிரி பிசினஸ் செய்ற ஆளுங்களுக்கு இந்த மாதிரி கொஞ்சமா குடிக்குற பழக்கம் தேவ. நாம போற பார்டியில நம்மள சுத்தி இருக்கவங்க எதிர்பார்க்குற மாதிரி நாம இருக்கணும் “ என்று கூறினாள்.
” எனக்கு சந்தோஷத்த தர விஷயங்களுக்காக நான் என்ன மாத்திகுறதுக்கு வருத்தப்பட மாட்டேன். பிசினஸ் செய்ற எல்லாரும் கட்டாயம் குடிக்கனும்னு அவசியம் இல்ல “ என்று ஆர்யன் அமைதியாக பதிலளித்தான்.
“இன்னிக்கு நீங்க வந்ததுல எனக்கு ரொம்ப சந்தோஷம், எங்கள உங்க வீட்டுல டின்னருக்கு கூப்பிட மாட்டீங்களா ? என்று மாயா கேட்டதும், அவளை ஏளனமாய் பார்த்து, ” என் வீட்டுக்கு அழையா விருந்தாளியா நீங்க ஏற்கனவே வந்திருக்கீங்க மிஸ் மாயா “ என்று சொன்ன ஆர்யனின் குரலில் கிண்டல் தொனித்தது. பின்னர் சட்டென தன்னை நிதானப்படுத்திக் கொண்டு, “ இருந்தாலும் உங்கள என் வீட்டுக்கு கூப்பிடுறதுல நான் ரொம்ப சந்தோஷப்படுறேன். தேதியும், நேரமும் உங்களுக்கு தெரியப்படுத்துறேன் “ என்று ஆர்யன் கூறினான்.
ஆர்யனின் வார்த்தையை கேட்டதும், “ ஓ மை காட், ரொம்ப நன்றி ஆர்யன், சீக்கிரம் உங்கள சந்திக்க நான் காத்திருப்பேன்” என்று மாயா சொன்னதும், ஆர்யன் பொறுமை இழப்பதை கவனித்த ரஞ்சித், “சார், உங்களுக்கு மீட்டிங் ஒண்ணு இருக்கு” என்று நினைவுபடுத்தினான்.
உடனே ஆர்யன் ” நாம கிளம்பலாம் ரஞ்சித்” என்று சொல்லி தலையசைத்தான்.
இதற்கிடையில் தோட்டத்தில் சந்திரசேகர் சஞ்சனாவுடன் பேசிக் கொண்டிருந்தார்.
” மிஸ் சஞ்சனா, பிசினஸ்ல உனக்கு இருக்க திடமான அறிவ பத்தி நான் கேள்விப்பட்டேன். நீ PAவா கெடச்சது ஆர்யனோட அதிர்ஷ்டம் “ என்று சந்திரசேகர் சொல்ல, ” ரொம்ப நன்றி சார். நான் பிசினஸ் கத்துக்க ஆர்யன் சார் எனக்கு நிறைய வாய்ப்பு கொடுத்துருக்காரு. அதுக்கு அவருக்கு தான் நான் நன்றி சொல்லணும் “ என்று பணிவுடன் கூறினாள் சஞ்சனா. அவள் பதிலை கேட்ட சந்திரசேகர், ” நல்லது. உன்ன எனக்குப் பிடிச்சிருக்கு” என்று புன்னகைத்தார்.
அவர்களது பேச்சு வார்த்தை எங்கே போகிறது என்று தெரியாமல் சஞ்சனா பதிலுக்கு ஒரு பணிவான புன்னகையை உதிர்த்தாள்.
” ஆர்யன எனக்கு ரொம்ப நாளா தெரியும். நான் எப்பவும் அவன பார்த்து வியந்து இருக்கேன். அவனோட திறன், அவனோட அறிவுகூர்ம, அவன் பிசினஸ் நடத்துற விதம், இது எல்லாமே எனக்கு ரொம்ப புடிக்கும். அவன் இன்னும் நிறைய சாதிக்கணும்னு நான் விரும்புறேன் “ என்று சந்திரசேகர், ஆர்யனை புகழ்ந்ததும், ” நிச்சயம் அவர் நிறைய சாதிப்பாரு சார் “ என்றாள் சஞ்சு புன்னகையுடன்.
” உனக்கு நான் ஒரு ஸ்பெஷல் வாய்ப்பு தர தயாரா இருக்கேன் சஞ்சனா. கனடாவுல இருக்க என்னோட பிசினஸ் கவனிச்சுக்க உன்ன மாதிரி புத்திசாலியான ஒருத்தர் எனக்குத் தேவ. நீ சம்மதிச்சா, அங்க எனக்கு கிடைக்குற லாபத்துல 30% உனக்கு தர நான் தயாரா இருக்கேன். அது மட்டும் இல்ல, அங்க உனக்கு சொந்தமா இரு மேன்ஷன் ஏற்பாடு பண்றேன். உனக்கு தேவையான எல்லாம் உன் காலடியில இருக்கும். சுருக்கமா சொல்லனும்னா, நீ ஒரு ராணி மாதிரி அங்க வாழலாம்.” என்று சந்திரசேகர் சொன்னதை கேட்டதும், சஞ்சனா திகைத்துப் போய் கண் சிமிட்டினாள்.
“சார், உங்க பொண்ணு தான் அங்க பிசினஸை பார்த்துக்கிட்டு இருக்காங்கன்னு நினைச்சேன், அதனால…” என்று சஞ்சு பேசும் போதே குறுக்கிட்ட சந்திரசேகர், ” என் பொண்ணு தான் எனக்கு எல்லாமே. இப்போ அவளோட கனவுகள், லட்சியத்த அடைய இப்போ இந்தியாவுல என் கூட இருக்கா. அவளோட லட்சியத்த அடைய, அவளுக்கு ஆதரவா நான் இங்க இருக்கேன். என் பொண்ணுக்காக, அவளோட சந்தோஷத்துக்காக நான் எந்த எல்லைக்கும் போவேன். அது நேர்மையான வழியா இருந்தாலும் சரி இல்ல வேற எந்த வழியா இருந்தாலும் சரி அதுல எனக்கு எந்த ஆட்சேபனை இல்ல “ என்று கூறினார்.
அவரது வார்த்தையில் இருந்த மிரட்டலை புரிந்து கொண்ட சஞ்சு, ” நீங்க உங்க பொண்ணு மேல இவ்ளோ பாசம் வெச்சுருக்குறத பார்க்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு. ஆனா என்ன மன்னிச்சிடுங்க சார், ஏன்னா நான் எப்பவுமே ஒரு ராணி மாதிரி வாழணும்னு ஆசைப்பட்டது இல்ல. நான் இப்போ வாழ்ந்துட்டு இருக்க வாழ்க்கையில ரொம்ப சந்தோஷமா இருக்கேன். உங்கள அவமதிச்சதா நீங்க நினைக்க மாட்டீங்கன்னு நம்புறேன், ஸாரி சார் “ என்று சஞ்சனா உண்மையாக பதிலளித்தாள்.
” நீ இப்போவே முடிவெடுக்கனும்னு அவசியம் இல்ல சஞ்சனா. கொஞ்சம் யோசிச்சு பாரு. என்னோட நோக்கம் என்னனு உனக்கு புரிஞ்சிடுச்சுனு எனக்கு நல்லா தெரியுது “ என்றார் சந்திரசேகர் ஒரு புன்னகையுடன்.
சஞ்சனா மெல்ல தலையசைத்து, ” ரொம்ப நல்லா புரியுது சார், ஆனா.. “ என்று அவள் பேசும்போதே, “ சஞ்சனா “ என்று ஆர்யனின் குரல் காற்றைக் கிழித்தது. சஞ்சனா சட்டென்று திரும்பிப் பார்த்து, ” சொல்லுங்க சார்?” என்று கேட்டாள்.
ஆர்யன் சந்திரசேகரைப் பார்த்து பணிவுடன் புன்னகைத்து, “ சார், நீங்க பேசும் போது குறுகிட்டதுக்கு மன்னிச்சிடுங்க ஆனா நாங்க அவசரமா கிளம்பனும். எனக்கு இப்போ ஒரு மீட்டிங் இருக்கு “ என்று கூறினான்.
“நல்லது ஜென்டில்மேன், நீங்க எல்லாரும் இன்னைக்கு வந்ததுல ரொம்ப சந்தோஷம். சீக்கிரம் உன்ன சந்திக்க ஆர்வமா இருக்கேன் “ என்று சந்திரசேகர் சொன்னதும், ” நிச்சயமா சார், என்னோட லாயர் உங்க PA கிட்ட பேசுவாரு “ என்று ஆர்யன் நிதானத்துடன் பதிலளித்தான்.
சந்திரசேகர் தலை அசைத்ததும், “ சஞ்சனா, வா போகலாம்.” என்று ஆர்யன் அவளை அழைத்தான். அத்துடன், ஆர்யன் திரும்ப, சஞ்சனா அமைதியாக அவனை பின்தொடர்ந்தாள். அவர்கள் DC இல்லத்தை விட்டு புறப்பட்டு காரில் ஏறியதும், ” ரஞ்சித், வீட்டுக்கு போ” என்றான் ஆர்யன்.
” சரிங்க சார்” என்று சொல்லி எஞ்சினை ஸ்டார்ட் செய்தான் ரஞ்சித்.
இதற்கிடையில், DC இல்லத்தின் லிவிங் அறையில் சந்திரசேகரும், மாயாவும் சோபாவில் அமர்ந்திருந்தனர்.
“அப்பா, நீங்க என்ன திட்டம் போட்டு இருக்கீங்க ?” என்று ஆவலுடன் முன்னால் குனிந்து கேட்டாள் மாயா. அதற்கு சந்திரசேகர், ” நாம பிசினஸ் பார்ட்னரா முதல்ல ஆரம்பிப்போம் மாயா.” என்று சொல்லி அமைதியாகப் புன்னகைத்தார்.
மாயா முகம் சுளித்து, “ஆனா அப்பா, பிசினஸ் பார்ட்னர்ஷிப் மூலமா நான் எப்படி ஆர்யன் கிட்ட நெருங்க முடியும் ? “ என்று கேட்டாள்.
” பிரின்சஸ், நீ அவன் கூட சேர்ந்து பார்ட்னரா, நேரடியா அவனோட ஆபீஸ்ல வேலை செய்வ. அது மூலமா அவன் கூட அதிக நேரம் இருக்க முடியும் “ என்று சந்திரசேகர் சொன்னதும், மாயாவின் முகத்தில் பிரகாசமான புன்னகை பரவியது. “ரொம்ப நன்றி அப்பா! ஆனா அந்த சஞ்சனா அங்க இருப்பாளே, அவள என்ன செய்றது ?” என்று கேட்டாள்.
மாயாவின் கேள்வியால் சந்திரசேகரின் முகபாவம் குளிர்ந்தது. ” நான் ஏற்கனவே அவளுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்துருக்கேன். கனடாவுல நம்ம பிசினஸ் பாத்துக்குற பொறுப்பு பத்தி பேசி இருக்கேன். அவ அதை அவ்ளோ சுலபமா ஏத்துக்குவானு தோணல ஆனா ஆர்யன் கிட்ட நான் ஒரு கண்டிஷன் சொல்லி இருக்கேன். சஞ்சனா இனி ஆர்யனுக்கு PAவா இருக்க மாட்டா. நீ ARC டவர்ஸ் போகும் போது அவ உங்க பக்கத்துல இருக்க மாட்டா ” என்று உறுதியளித்தார்.
சஞ்சு இனி ஆர்யனோடு அலுவலகத்தில் இருக்க மாட்டாள் என்ற செய்தியை கேட்டதும், ” ஐ லவ் யூ அப்பா “ என்று சொன்ன மாயாவின் கண்கள் மகிழ்ச்சியில் பளபளத்தன.
சந்திரசேகர் தலையசைத்தார், ஆனால் அவரது கண்கள் சிந்தனையில் திரும்பின. ” பொறுத்திருந்து பார்ப்போம், மாயா. ஆர்யன் ரொம்ப புத்திசாலி, நம்ம திட்டம் என்னவா இருக்கும்னு சுலபமா யூகிக்குற அளவுக்கு அவன் திறமைசாலி. அதனால நம்ம திட்டத்த மிஞ்ச முயற்சி செய்வான். அவன் ஏதாவது திட்டம் போடுறானான்னு தெரிஞ்சிக்க அக்ரீமென்ட் பேப்பர்ஸ் பார்த்த அப்புறம் தான் நமக்கு தெரியும் “ என்று கூறினார்.
“இதுல இருந்து தப்பிக்க அவருக்கு எந்த வழியும் கிடைக்காதுனு நான் நம்புறேன்,” என்று மாயா நம்பிக்கையுடன் சொல்ல, “அப்படித் தான் நானும் நம்புறேன் ஆனா நம்ம நெனச்சது நடக்குற வர நீ எந்த விளையாட்டும் ஆரம்பிக்காத “ என்று சந்திரசேகர் அவளை எச்சரித்தார். அதற்கு மாயா அவரிடம், ” சத்தியமா உங்களுக்கு தெரியாம நான் எதுவும் செய்ய மாட்டேன் பா ” என்று உறுதியளித்தாள்.
ஆர்யனும், சஞ்சனாவும் சந்திரசேகர் வீட்டில் இருந்து கிளம்பிய தருணத்தில் இருந்து மௌனமாக இருந்தனர். காரின் சூழல் சொல்லப்படாத பதற்றத்தால் அடர்த்தியாக இருந்தது. அவர்கள் மேன்ஷனை அடைந்து உள்ளே நுழைந்ததும், ஆர்யன் ரஞ்சித்தின் பக்கம் திரும்பி ” ரஞ்சித், ஆபீஸ் ரூம்ல இரு, நான் கொஞ்ச நேரத்துல திரும்பி வருவேன்.” என்று சொன்னான்.
“ஓகே சார்” என்று தலையசைத்து விட்டு ஆபீஸ் ரூமை நோக்கி ரஞ்சித் சென்றதும், ஆர்யனும் சஞ்சனாவும் அமைதியாக தங்கள் அறைக்கு நடந்தனர். அவர்கள் உள்ளே நுழைந்ததும், சஞ்சனா சோபாவில் சரிந்தாள், அவளுடைய முகபாவம் படிக்க முடியாததாக இருந்தது.
“சஞ்சு… நல்லா இருக்கியா ?” என்று ஆர்யன் கேட்கும் வரை அறையில் நிசப்தம் கனத்திருந்தது.
சஞ்சு அவன் கண்களைச் சந்தித்து மெல்ல தலையசைத்து, “ ஹ்ம்ம்… நல்லா இருக்கேன், அவர் என்ன கண்டிஷன் சொன்னாரு?” என்று கேட்டாள்.
ஆர்யன் பதில் சொல்வதற்கு முன் ஒரு கணம் எடுத்துக்கொண்டு, ” நாங்க ரெண்டு பேரும் ஒரே ஆபீஸ்ல வேலை செய்யப் போறோம். அப்புறம் ரெண்டு தரப்புல இருந்தும், வேலை செய்ய ஆட்கள் சம எண்ணிக்கையில இருப்பாங்க “ என்று கூறினான். அதன் பின்னர் அவன் அமைதியாக இருப்பதை பார்த்த சஞ்சு, ” அப்புறம்..வேற என்ன ?” என்று அழுத்தமாக கேட்டாள்.
” அப்புறம்… நீ என் PA.வா இருக்க மாட்ட ” என்று ஆர்யன் சொன்னதும், ” என்ன? என்ன சொல்றீங்க ? ” என்று கேட்டு சஞ்சனா நிமிர்ந்து உட்கார்ந்தாள், அவள் கண்களை அதிர்ச்சியில் அகல விரித்தாள்.
” நான் அவரோட எல்லா கண்டிஷனுக்கு சம்மதம் சொல்லிட்டேன் “ என்று ஆர்யன் சொன்னதும், “ அப்போ நீங்க சொல்றத பார்த்தா, நான் இனிமே உங்க பி.ஏ.வா இருக்க மாட்டேனா?” என்று கேட்ட சஞ்சுவின் குரல் தாழ்ந்தது.
ஆர்யன் அவளருகே சென்று அவளை இழுத்து அணைத்து அவள் கூந்தலில் இருந்த ப்ரூச்சை மெதுவாக அகற்றினான். அவனது விரல்கள் அவளது தலைமுடியை ஆசையோடு வருடின.
” ஸ்வீட் ஹார்ட், என் வாழ்க்கையில நீ என்ன இடத்துல இருக்க, நம்ம உறவு என்னனு உனக்கு நல்லாவே தெரியும் அப்படி இருக்கும் போது, இந்த PA வேலைக்கு என்ன அர்த்தம் இருக்கு ?” என்று ஆர்யன் கேட்டான்.
சஞ்சனா அவன் மார்பில் தலை சாய்த்துக் கொண்டு, “ ஆர்யன், நான் எப்பவும் உன் கூடவே இருந்து பழகிட்டேன். இப்போ நான் உன் PAவா இருக்க முடியாதுனா என்னால உன் கூட இருக்க முடியாது, நாள் முழுக்க நான் உன்ன மிஸ் பண்ணுவேன் “ என்று கூறினாள்.
அவள் வார்த்தையை கேட்டு ஆர்யன் மெல்ல சிரித்தான். ” அதனால என்ன ஸ்வீட் ஹார்ட் ? நான் ஆபீஸ வீட்டுக்கு மாத்திடுறேன், அப்போ நாம எப்பவும் ஒன்னா இருக்கலாம் ” என்று சொன்னான் ஆனால் சஞ்சு மறுத்து தலை ஆட்டி, ” இல்ல… அப்படி செய்யாத” என்று சொன்னாள்.
“இத பத்தி இப்போ பேச வேணாம், அதுக்கு இன்னும் நிறைய நேரம் இருக்கு. இப்போ எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு. கொஞ்ச நேரத்துல வந்துடறேன்.” என்று சொல்லி அவளுக்குத் தெரியாமல் ப்ரூச்சை பாக்கெட்டில் போட்டுக் கொண்டு அறையை விட்டு வெளியேறினான் ஆர்யன்.
ஆபீஸ் ரூமை அடைந்ததும் ஆர்யன் ப்ரூச்சை ரஞ்சித்திடம் கொடுத்து, “இதுல இருந்து மைக்ரோசிப் ரெக்கார்டரை எடு ” என்று சொன்னான்.
” நாம இது பண்ணது நல்ல ஐடியா சார் “ என்று சொல்லி ரஞ்சித் சிரித்தான். அதற்கு ஆர்யன் அவனிடம், ” சந்திரசேகர் என்ன சொன்னாலும் சஞ்சு என்கிட்ட சொல்ல மாட்டானு எனக்குத் தெரியும் அதனால தான் இந்த ஐடியா முடிவு பண்ணேன் ” என்றான் ஆர்யன்.
ரஞ்சித் கவனமாக அந்த மைக்ரோசிப்பிலிருந்து பதிவுகளை எடுத்து இயக்கினான். அதில் சந்திரசேகர், சஞ்சுவிடம் பேசிய அனைத்தும் உன்னிப்பாகக் கேட்ட ஆர்யனின் கண்கள் சுருங்கி, அவன் தாடை கோபத்தில் இறுகியது.
“சார், அமைதியா இருங்க ப்ளீஸ் ” என்று ரஞ்சித் அவனை அமைதிப்படுத்த முயன்றான்.
” அவர் எல்லாத்தையும் கச்சிதமாக திட்டம் போடுறாரு. அவர் திட்டப்படி, மாயா பிசினஸ் பார்ட்னரா ARC டவர்ஸ்ல வேலை செய்வா. நான் சஞ்சுவ வேலைய விட்டு அனுப்பிட்டா, அவங்க திட்டப்படி மாயாவுக்கு என்ன மயக்க தேவையான நேரம் இருக்கும் “ என்று ஆர்யன் அவர்களின் திட்டத்தை யூகித்தான்.
” உங்கள எல்லா வகையிலையும் சிக்க வெச்சு மாயா கூட சேர்த்து வைக்க எல்லா கோணத்துலையும் பிளான் செய்றாரு” என்றான் ரஞ்சித்.
ஆர்யன் மெல்லத் தலையசைத்து, ” பல வருஷமா பிசினஸ் செய்றாரு, அதனால இந்த அளவுக்கு பிளான் போடுறதுல எந்த ஆச்சரியமும் இல்ல “ என்று கூறினான். அதற்கு ரஞ்சித், “ நம்ம அடுத்த திட்டம் என்ன சார்?” என்று கேட்டான்.
” அவர் திட்டப்படி நாம எல்லாத்தையும் செய்வோம் ஆனா அக்ரீமென்ட் கையெழுத்து போடுற அன்னைக்கு என்னோட இறுதி ஆட்டம் அவர் கொஞ்சம் கூட நெனச்சு பார்க்காத அளவுக்கு அதிர்ச்சியா இருக்கும் “ என்று சொன்ன ஆர்யனின் கண்களில் ஒரு கூர்மையான சூழ்ச்சி தெரிந்தது.
அப்போது, ரஞ்சித்தின் மொபைல் ஒலித்தது. அவன் பதிலளித்துவிட்டு ஆர்யன் பக்கம் திரும்பி, “சார், லாயர் வந்துட்டாரு. நான் அவர உள்ள கூட்டிட்டு வரேன் “ என்று சொல்லி வெளியேறினான்.
சில நிமிடங்களுக்குப் பிறகு, ரஞ்சித் வக்கீலுடன் மீண்டும் திரும்பி வந்தான்.
” ஹலோ சார், குட் ஈவனிங் ” என்று வக்கீல் ஆர்யனை பார்த்து புன்னகைத்ததும், ” குட் ஈவினிங், ரஞ்சித் ஏற்கனவே உங்க கிட்ட என்ன செய்யணும்னு சொல்லி இருப்பான்னு நம்புறேன் “என்று ஆர்யன் கேட்டான். அதற்கு அவர், ” ஆமாங்க சார், சொல்லிட்டாரு ” என்று பதில் அளித்தார்.
“ சந்திரசேகர் சொன்ன கண்டிஷன் எல்லாம் சேர்த்து நீங்க அக்ரீமன்ட் ரெடி பண்ணனும் ஆனா அதுல யாரோட பெயரும் இருக்க கூடாது, ரெண்டு தரப்புல இருந்தும் CEO மட்டும் போடுங்க போதும். அது மட்டும் இல்ல நாளைல இருந்து சஞ்சனா ARCயில ஊழியரா இருக்க மாட்டானு ஒரு தனி டாகுமென்ட் ரெடி பண்ணுங்க. மத்த விஷயங்கள் பத்தி ரஞ்சித் உங்களுக்கு சொல்லுவான். இன்னிக்கு நைட்டுக்குள்ள எல்லாத்தையும் ரெடி பண்ணுங்க.” என்று ஆர்யன் சொன்னதை கேட்டு, “கண்டிப்பா சார். நான் பார்த்துக்குறேன் ” என்று ரஞ்சித் உறுதியாகத் தலையசைத்தான்.
ஆர்யன் அவர்களை வேலை செய்ய விட்டு தன் அறைக்குத் திரும்பி தன்னுடைய மேஜையில் அமர்ந்து அலுவலக மின்னஞ்சல்களை பார்க்க தொடங்கினான். அவனுடைய மனம் அவர்களை சுற்றி நடக்கும் ஒவ்வொரு அசைவையும் கணக்கிட்டுக் கொண்டிருந்தது.
சிறிது நேரம் கழித்து ஒரு தட்டில் இரண்டு கப் காபியுடன் சஞ்சனா உள்ளே வந்தாள்.
“ஆர்யன், காபி குடிச்சிட்டு உன் வேலைய பாரு “ என்று அவள் சொன்னதும், ஆர்யன் நிமிர்ந்து பார்த்து, ” லாயர்க்கும், ரஞ்சித்துக்கும் காபி கொடுத்தாச்சா ?” என்று கேட்டான்.
“ஆமா பா, காபி, ஸ்நேக்ஸ் எல்லாம் கொடுத்தாச்சு. கௌசல்யா அம்மா கிட்ட சொல்லி நைட்டு டின்னரும் ரெடி பண்ண சொல்லிட்டேன் “ என்று சஞ்சு சொன்னதை கேட்டதும், ஆர்யன் மெலிதாகச் சிரித்து, “ஹ்ம்ம். நல்ல வேல பண்ணி இருக்க பேபி “ என்று சொல்லி புன்னகைத்தான்.
சஞ்சு படுக்கையில் உட்கார்ந்து, ஆர்வமாக அவனை பார்த்து, “ என்ன அவசர வேல ஆர்யன் ? லாயர் நம்ம வீட்ல இருந்து வேலை செய்ற அளவுக்கு அவசரமா ? “ என்று கேட்டாள். அதற்கு ஆர்யன் தயங்காமல், ” இது கொஞ்சம் ரகசியமா இருக்கனும் அதனால தான் இங்கேயே இருந்து வேலை செய்ய சொல்லிட்டேன். பார்ட்னர்ஷிப் அக்ரீமன்ட், அதனால நாம கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்குறது நல்லது “ என்று பதில் சொன்னான்.
கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கழிந்த பின்னர் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு சஞ்சனா கதவைத் திறந்து பார்த்தபோது ரஞ்சித் கையில் ஒரு ஃபைலுடன் நின்று கொண்டிருந்தான்.
“சஞ்சு, இந்த டாகுமென்ட்ட சார் கிட்ட கொடு.” என்று சொல்லி ரஞ்சித் அந்த ஃபைலை ( file ) அவளிடம் கொடுத்துவிட்டு சென்றான்.
சஞ்சு ஃபைலை ஆர்யனிடம் கொடுக்க, அவன் அவளை சீரியஸாக பார்த்து, “சஞ்சு, நீ என்னை நம்புறியா ? “ என்று கேட்டான். அதற்கு அவள் புருவத்தை உயர்த்தி, ” இது என்ன கேள்வி ? நான் என்ன நம்புறத விட உன்ன தான் அதிகமா நம்புறேன்.” என்று சொன்னாள்.
ஆர்யன் உடனே சில ஆவணங்களை அவளிடம் கொடுத்து, ” அப்போ, இந்த டாகுமென்ட்ல கையெழுத்து போடு “ என்று சொன்னான். சஞ்சனா எந்த தயக்கமும் இன்றி ஆவணத்தை வாங்கிக் கையெழுத்திட்டாள்.
அவளையே பார்த்துக் கொண்டிருந்த ஆர்யன், ” இந்த டாகுமென்ட்ல என்ன இருக்குனு கேட்க மாட்டியா ?” என்று கேட்டான். சஞ்சு மெல்லிய புன்னகையுடன் அவற்றை திருப்பிக் கொடுத்து, ” உனக்கு விருப்பம் இருந்தா சொல்லலாம் ஆனா எனக்கு உன் மேல நம்பிக்க இருக்கு அதனால கையெழுத்து போட்டு இருக்கேன். இதுல என்ன . இருந்தாலும் எனக்குக் கவலையில்ல” என்று சொன்னாள்.
” இனி நீ ARCயில ஊழியரா இருக்க மாட்டா, அதுக்கான டாகுமென்ட் தான் இது “ என்று ஆர்யன் சொன்னதும், “ஓ… பரவாயில்ல” என்றாள் சஞ்சு தோள்களைக் குலுக்கியபடி.
” ஸ்வீட் ஹார்ட், இங்க வா.” என்று ஆர்யன் அழைத்ததும் அவள் சென்று அவனருகில் அமர்ந்தாள் ஆனால் ஆர்யன் அவளை மெல்ல இழுத்து தன் மடியில் அமர்த்தி அவள் கழுத்தை வருடி மென்மையாக ஒரு முத்தம் கொடுத்து, “ ஐ லவ் யூ “ என்று சொன்னான்.
” நானும் ஐ லவ் யூ “ என்று சஞ்சு சொன்னதும், “ டின்னர் இங்க ரூமுக்கு கொண்டு வா, நாம இங்கேயே சாப்பிடலாம் “ என்று ஆர்யன் சொன்னான். சஞ்சு உணவை கொண்டு வந்ததும், இருவரும் சோபாவில் ஒன்றாக அமர்ந்து, ஒருவருக்கொருவர் அமைதியாக ஊட்டி உணவை அனுபவித்து சாப்பிட்டனர்.
இரவு உணவுக்குப் பிறகு ஆர்யன் அவளிடம், ” நீ தூங்கு சஞ்சு, வேலை எந்த அளவுக்கு முடிஞ்சி இருக்குனு நான் லாயர் கிட்ட பேச வேண்டி இருக்கு “ என்று சொன்னான். “சரி,” என்று முணுமுணுத்தபடி சஞ்சு படுக்கைக்கு சென்றதும் ஆர்யன் ஆபீஸ் சென்று அங்கு ரஞ்சித்தும், வக்கீலும் இன்னும் ஆழ்ந்த விவாதத்தில் இருப்பதை பார்த்தான்.
“நீங்க ரெண்டு பேரும் சாப்பிட்டீங்களா?” என்று ஆர்யன் கேட்டதும் இருவரும் ஆம் என்று பதில் சொன்னார்கள்.
“வேலை எவ்ளோ தூரம் முடிஞ்சு இருக்கு ?” என்று ஆர்யன் கேட்க, “கிட்டத்தட்ட முடிஞ்சிடுச்சு சார் “ என்றார் வக்கீல்.
சஞ்சு கையெழுத்திட்ட ஒப்பந்தத்தை வக்கீலிடம் கொடுத்து, ” இந்தாங்க பேப்பர்ஸ், இதுல சஞ்சனா கையெழுத்து போட்டு இருக்கா. நீங்க இப்போ செய்ய வேண்டியத செய்யலாம் “ என்று ஆர்யன் கூறினான். அதற்கு சரி என்று சொல்லி வக்கீல் அந்த ஆவணத்தை பெற்று கொண்டார்.
சில நிமிடங்கள் கழித்து ஆர்யனிடம் பார்ட்னர்ஷிப் ஆவணங்களை லாயர் கொடுத்தார். அவர்கள் அனைத்து ஆவணங்களையும் இறுதி செய்து முடித்தபோது, நள்ளிரவைத் தாண்டிவிட்டது.
” இந்த வேலைய முடிக்க இங்க வந்ததுக்கு ரொம்ப நன்றி ” என்று ஆர்யன் கூறியதும், ” இது என் கடமை சார். நீங்க எப்போ வேணும்னாலும் என்ன கூப்பிடலாம் ” என்று வக்கீல் பதிலளித்தார்.
ஆர்யன், ரஞ்சித் பக்கம் திரும்பி ” இந்த டாகுமென்ட் நகல் எடுத்து சந்திரசேகர் சாருக்கு அனுப்பு. அவர் ஏதாவது மாத்தணும்னு சொன்னா, அந்த திருத்தங்கள செய்றதுக்கு முன்னாடி எனக்கு தெரியப்படுத்து “ என்று சொன்னான். அதற்கு ரஞ்சித், ” இதுல எந்த மாற்றமும் தேவைப்படாதுனு நம்புறேன்” என்று மெல்லிய புன்னகையுடன் கூறினான்.
“நானும் அப்படித் தான் நம்புறேன்,” என்று ஆர்யன் பதிலளித்தான், அவனது குரல் அமைதியாக ஆனால் கவனமாக இருந்தது.
ரஞ்சித்தும் வக்கீலும் ஆபீஸ் ரூமை விட்டு வெளியேறியதும், ஆர்யன் படுக்கையறைக்குத் திரும்பினான். சஞ்சனா ஏற்கனவே ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள், அவளுடைய மூச்சு மென்மையாகவும் சீராகவும் இருந்தது.
அவனது திட்டம் சரியான நகர்வாக இருக்கும் என்ற திருப்தியான புன்னகையுடன், அவளுக்குப் பக்கத்தில் படுத்து, அவளைத் தன் கைகளுக்குள் இழுத்து அணைத்துக்கொண்டான்.
**************************
முன்னோட்டம்:
” நீ ஃபார்மல் பேன்ட், சட்டை போட்டா ஒரு அழகான ஹல்க் மாதிரி இருப்ப. மொத்தத்துல நீ எந்த டிரஸ் போட்டாலும் எனக்கு அப்படியே உன்ன கடிக்கணும் போல இருக்கும் ? “

1 comment
[…] Chapter 44 […]