DC குழுமத்தின் அலுவலகத்தில், காலை நேரம் ஆற்றலுடன் பரபரப்பாக இருந்தது. ஊழியர்கள் தங்கள் அன்றாட பணிகளில் மூழ்கியபடி கண்ணாடி தாழ்வாரங்களில் வேகமாக நகர்ந்தனர். மேல் மாடியில், சேர்மன் அறைக்கு வெளியே, கையில் ஒரு ஃபைலுடன் பொறுமையாகக் காத்திருந்தான் ரஞ்சித்.
சில நொடிகளுக்குப் பிறகு சந்திரசேகர் வேகமாக தனது அறையை நோக்கி நடந்து வர, அவரைத் தொடர்ந்து அவரது PA வந்தார். ரஞ்சித்தைப் பார்த்ததும், லேசாக தலையசைத்து, அவனை உள்ளே வரும்படி சைகை செய்தார் சந்திரசேகர்.
“குட் மார்னிங் சார்” என்று சொல்லி மரியாதையுடன் அவர் முன் நின்றான் ரஞ்சித். அதற்கு அவரும், “குட்மார்னிங் ரஞ்சித்” என்றபடி அவரது இருக்கையில் அமர்ந்தார்.
ரஞ்சித் ஃபைலை அவரிடம் ஒப்படைத்து, “சார், அதுல அக்ரீமென்ட் நகல் எல்லாம் இருக்கு. நீங்க உங்க லாயர் கிட்ட கொடுத்து சரிபாருங்க, ஏதாவது திருத்தம் செய்ய வேண்டி இருந்தா எனக்கு தெரியப்படுத்துங்க ” என்று கூறினான். அதற்கு அவர், “ ரொம்ப நல்லது ரஞ்சித், நான் நாளைக்குத் தெரியப்படுத்தறேன்” என்று சொன்னபடி ஃபைலைப் புரட்டிப் பார்த்தார்.
” சரிங்க சார், அப்புறம் சஞ்சனாவ வேலைய விட்டு அனுப்புறதுக்கு சம்மந்தமான டாகுமென்ட் நகலும் கூட அதுல இருக்கு “ என்று ரஞ்சித் சொல்ல, ” சரி ரஞ்சித், டாகுமென்ட் சரிபார்த்த உடனே பார்ட்னர்ஷிப் பத்தி அதிகாரப்பூர்வமா அறிவிக்க ஒரு தேதியை நான் சொல்றேன் ” என்று சந்திரசேகர் கூறினார் ஆனால் ரஞ்சித் அப்போது குறுக்கிட்டு, ” சார், ஆர்யன் சார் ஏற்கனவே ஒரு தேதிய முடிவு பண்ணி இருக்காரு. நீங்க டாகுமென்ட் சரி பார்த்த அப்புறம் அவர் அந்த தேதிய சொல்லுவாரு “ என்று சொன்னான்.
உடனே சில நொடிகள் யோசித்த சந்திரசேகர், “ஹ்ம்ம்…சரி, நான் நாளைக்குள்ள பதில் சொல்றேன் “ என்றார்.
“சரிங்க சார். நான் இப்ப கிளம்புறேன்.” என்று சொல்லி அலுவலகத்தை விட்டு வெளியேறிய ரஞ்சித், நேராக ARC டவர்ஸ் அடைந்து ஆர்யனின் அறைக்கு சென்றான்.
“சார், டாகுமென்ட் அவர் கிட்ட கொடுத்துட்டேன், நாளைக்கு பதில் சொல்றதா சொல்லி இருக்காரு “ என்று ரஞ்சித் சொன்னதும், ஆர்யன் நாற்காலியில் சாய்ந்து, “ஹ்ம்ம். அவருக்கு அதுல எந்த திருத்தமும் தேவைப்படாது “ என்று என்று சொன்னான்.
ரஞ்சித் புன்னகைத்து, “ பார்ட்னர்ஷிப் பத்தி அதிகாரப்பூர்வமா அறிவிக்க தேதிய நீங்க முடிவு பண்ணிட்டீங்கனு அவர் கிட்ட சொல்லிட்டேன் “ என்று ரஞ்சித் சொன்னதும், ” ஹ்ம்ம், நான் ஏற்கனவே சொன்ன தேதி தான் ரஞ்சித், இன்னும் ஆறு நாள் தான் இருக்கு. இந்த முறை பார்ட்டி நம்ம மேன்ஷன்ல ஏற்பாடு செய் அதோட மீடியாவையும் வர சொல்லு “ என்று கூறினான்.
” புரியுது சார்.” என்று ரஞ்சித் சொல்ல, ” நான் லண்டன் போக ஜெட் ரெடி பண்ணு. நான் வர போறேன்னு அவங்க கிட்ட சொல்லிடு. நாளைக்கு சாயங்காலம் சந்திரசேகர் கிட்ட இருந்து பதில் வந்த அப்புறம் நான் கிளம்புறேன் “ என்று ஆர்யன் கூறினான்.
” எப்போ திரும்பி வருவீங்க சார்?” என்று ரஞ்சித் கேட்க, “ பார்ட்டி அன்னைக்கு வருவேன் “ என்றான் ஆர்யன். அவன் வார்த்தையா கேட்ட ரஞ்சித் தயங்கியபடி, “சார்… உறுதியா அன்னைக்கு தான் திரும்பி வர போறீங்களா ?” என்று கேட்டான்.
ஆர்யன் தலையசைத்து, “ஆமா, அதுக்கு ஏத்த மாதிரி எல்லாத்தையும் பிளான் பண்ணு “ என்று சொன்னான். ரஞ்சித் சரி என்று சொன்னதும், ” நான் திரும்பி வர்றதுக்குள்ள, நம்ம பக்கத்துல இருந்து வேலைக்கு வைக்க தகுதியான ஆளுங்களோட லிஸ்ட் ரெடி பண்ணிடு “ என்று சொன்னான் ஆர்யன்.
ரஞ்சித் அவன் செய்ய வேண்டிய வேலைகளை குறித்துக் கொண்டு வெளியே சென்றான்.
ஆர்யன் மேன்ஷனில், சஞ்சு அறையில் அமர்ந்து பவியுடன் பேசிக் கொண்டிருந்தாள்.
“ஏய், நீ ஏன் இன்னும் ஆபீசுக்கு வரல?” என்று பவி கேட்டதும், “ நான் இனிமே ARCயோட ஊழியர் இல்ல, நான் வேலைக்கு வர மாட்டேன் “ என்று சொன்ன சஞ்சுவின் குரல் அமைதியாக ஆனால் கனமாக இருந்தது. அதை கேட்டதும், “ என்ன உளறிட்டு இருக்க சஞ்சு ? “ என்று அதிர்ச்சியோடு கேட்டாள் பவி.
“ஹ்ம்ம், ஆமா பவி. மாயாவோட அப்பா நான் ARCயில வேலை செய்ய கூடாதுனு கண்டிஷன் போட்டு இருக்காரு “ என்று சஞ்சு சொல்ல, “ ஆர்யன் சார் அதுக்கு சம்மதிச்சிட்டாரா ? “ என்று பவி கேட்டாள்.
” ஆமா, இந்த பார்ட்னர்ஷிப் ஆரம்பிக்கும் போது எந்த பிரச்சனையும் ஏற்பட நான் விரும்பல. என்னால ஆர்யனுக்கு எந்த பிரச்சனையும் வர வேணாம்னு நான் அவர எதுவும் கட்டாயப்படுத்தல “ என்று சஞ்சு வருத்தத்துடன் சொன்னாள்.
” எனக்கு அந்த மாயாவ பார்த்தா எதுவும் சரியாப்படல. அவ ஆளும் சரி இல்ல, அவ பார்வையும் சரி இல்ல “ என்று பவி சொன்னதை கேட்ட சஞ்சு, ” ஆமா, நீ சொல்றது சரி தான். நேத்து நாங்க DC ரெசிடென்ஸ் போன அப்போ நீச்சல் டிரஸ் போட்டு வந்தா. அப்படியே செம்ம கடுப்பா இருந்துச்சு “ என்று சொன்னாள்.
” அய்யோ, ஆர்யன் சார் செம்ம கடுப்பா இருந்து இருப்பாரே ? “ என்று பவி கேட்க, “ஆமா, செம்ம டென்ஷன் ஆயிட்டாரு “ என்று சஞ்சு கூறினாள்.
” அவள சுத்தி கொஞ்சம் கவனமா இருங்க.” என்று பவி கவலையோடு சொன்னதும், ” நிச்சயமா, சரி நீ வேலைய பாரு, நான் அப்புறம் பேசுறேன்.” என்று சொல்லி அழைப்பை துண்டித்தாள் சஞ்சு.
இதற்கிடையில், DC குழுமத்தின் சேர்மன் அலுவலகத்தில், சந்திரசேகரும் அவரது வழக்கறிஞரும் ஆர்யன் அனுப்பிய பார்ட்னர்ஷிப் ஆவணங்கள் குறித்து தீவிரமாக விவாதித்தனர்.
” சார், அவர் உங்க பெயர இதுல குறிப்பிடல, வெறும் CEO மட்டும் தான் போட்டு இருக்காரு ” என்று தனது கண்ணாடியை சரி செய்தபடி வழக்கறிஞர் சொன்னதும், சந்திரசேகர் நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்தார். அவருடைய உதடுகளின் ஓரத்தில் ஒரு வேடிக்கையான புன்னகை தவழ்ந்தது. ” உண்மையில, அது அப்படி இருக்கனும்னு நான் தான் சொன்னேன் “ என்று கூறினார்.
வக்கீல் சற்று குழப்பத்துடன் கண் சிமிட்டி, “சரி… ஆனா அவரோட பெயரும் இதுல போடாம இருக்காரு. அவர் பெயர் இருக்க வேண்டிய இடத்துல கூட CEO தான் போட்டு இருக்காரு “ என்று சொன்னார்.
” அது அப்படியே இருக்கட்டும், இப்போ என் பொண்ணு மாயா DC குழுமத்தோட CEOவா பொறுப்பெடுத்துக்க டாகுமென்ட் ரெடி பண்ணுங்க. அதுக்கு அப்புறம் மாயா, ஆர்யன் கூட பார்ட்னரா வேலை செய்வா “ என்று சந்திரசேகர் சொன்னதை கேட்டதும், வக்கீல் புருவம் சுருங்க லேசாகத் தயங்கினார். ” சார், இந்த ஐடியாவுக்கு உங்க மகன் ஆட்சேபிச்சா என்ன பண்றது?” என்று கேட்டார்.
” நரேன் எந்த பிரச்சனையும் செய்ய மாட்டான். எனக்கு அப்புறம் அவன் தான் சேர்மன் பதவியில இருக்க போறான் அதனால மாயா CEOவா இருக்குறதுல அவனுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது. என்னால அவன சமாளிக்க முடியும்” என்று சந்திரசேகர் சொன்னதும், ” புரியுது சார். ஆர்யன் நீங்க சொன்ன மாதிரி தான் டாகுமென்ட் ரெடி பண்ணி இருக்காரு ” என்று வக்கீல் கூறினார்.
” இதுல ஆர்யன் சதி செய்ற மாதிரி ஏதாவது ஓட்டை இருக்கா ?” என்று கேட்ட போது சந்திரசேகரின் பார்வை கூர்மையடைந்தது.
” அப்படி எதுவுமில்லை சார், நீங்க சொன்ன மாதிரி தான் எல்லாமே ரெடி பண்ணி இருக்காரு, ” என்று வழக்கறிஞர் உறுதியளித்தார். அதையடுத்து, ” நல்லது, அப்போ நான் ஆர்யன் கிட்ட இத பத்தி சொல்லிடுறேன் “ என்று கூறிய சந்திரசேகர், அவரிடம், “ மாயாவோட பேப்பர்ஸ் ரெடி பண்ணி வீட்டுக்கு அனுப்புங்க, அவ அதுல கையெழுத்து போடுவா “ என்று கூறினார்.
“நாளைக்குள்ள அனுப்பி வைக்குறேன் ” என்று வக்கீல் சொன்னதும், சற்று இடைவெளி விட்ட சந்திரசேகர், “ ஆனா நானே மாயா CEOவா பதவி ஏத்துக்குறத அறிவிக்குற வர இது ரகசியமா இருக்கணும் “ என்று கண்டிப்பாக சொன்னார்.
சரி என்று பதிலளித்த வக்கீல், விடைபெற்று சென்ற பின் தனிமையில் இருந்த சந்திரசேகர் தனது மொபைலை எடுத்து மாயாவை அழைத்தார். அவளும் உடனே அவர் அழைப்புக்கு பதில் அளித்து, “ சொல்லுங்க அப்பா “ என்றாள்.
“மாயா, ஆர்யன் பார்ட்னர்ஷிப் டாகுமென்ட் அனுப்பிட்டான். நம்ம லாயர் அத பாத்துட்டு எல்லாம் சரியா இருக்குனு சொல்லிட்டாரு “ என்று சந்திரசேகர் சொன்னதை கேட்ட மாயா, ” சஞ்சனா, ஆர்யனோட PAவா வேலை செய்றத பத்தி என்ன ஆச்சு ?” என்று கேட்டாள்.
“ அவ இனி அங்க வேலை செய்ய மாட்டா, இந்த மாசத்தோட அவளோட வேலை அங்க முடியுது அதனால நீ கவலைப்படாத “ என்று சந்திரசேகர் ஆவேசமாக கூறியாதும், ” ஓ மை காட்! ரொம்ப நன்றி அப்பா!” என்று மாயா இன்பத்தில் கிறீச்சிட்டாள்.
” வக்கீல் உனக்கு சில டாகுமென்ட் அனுப்புவாரு, நீ அத வாங்கினதும் அதுல கையெழுத்து போடு “ என்று சந்திரசேகர் சொன்னதும் குழப்பத்துடன், “என்ன டாக்குமெண்ட்ஸ் பத்தி பேசுறீங்க?” என்று மாயா ஆர்வமாக கேட்டாள்.
” நீ தான் இனி நம்ம பிசினஸ் குழுமதத்தோட CEOவா பதவி ஏற்க போற, அதன் மூலமா அதிகாரப்பூர்வமா நீ ஆர்யன் கூட பார்ட்னரா இருந்து வேலை செய்ய போற “ என்று அவர் அமைதியாக கூறியதை கேட்ட மாயா, மூச்சிரைத்து, திகைப்பில், “அப்பா, நீங்க நிஜமா தான் சொல்றீங்களா ? எனக்கு இது பெரிய சர்ப்ரைஸ் அப்பா “ என்று மகிழ்ச்சியில் கூறினாள்.
“என் இளவரசிக்காக நான் எதுவும் செய்வேன் ” என்று சொல்லி சந்திரசேகர் சிரித்தார். ” லவ் யூ, அப்பா!” என்று உற்சாகத்துடன் சொல்லி மாயா அழைப்பை துண்டித்தாள்.
அன்று மாலை, அஸ்தமன சூரியனின் பொன் நிறம் திரைச்சீலைகள் வழியாக ஊடுருவிச் செல்ல, சஞ்சு தனது படுக்கையில், கட்டிலில் சாய்ந்து உட்கார்ந்திருந்தாள், அவள் கைகளில் ஒரு புத்தகம் இருந்தது. கதவு கிறீச்சிடும் ஓசையுடன் திறந்து ஆர்யன் உள்ளே நுழைந்ததும் அவள் கண்கள் ஆச்சரியத்தில் மின்னியது.
” என்ன இன்னைக்கு இவ்ளோ சீக்கிரம் வந்துட்டீங்க ?” என்று கேட்டவளின் குரலில் ஆச்சரியம் தொனித்தது. அதை கேட்டதும் ஆர்யனின் உதடுகள் மெல்லிய புன்னகையாக வளைந்தன. ” என் ஸ்வீட் ஹார்ட்ட பார்க்க விரும்பினேன், அதனால சீக்கிரம் வந்துட்டேன் “ என்று சொல்லி கழுத்தில் இருந்து டையை அவிழ்த்துவிட்டு அவள் நெற்றியில் முத்தமிட்டான்.
” சரி, டிரஸ் மாத்திட்டு வாங்க, நான் காபி கொண்டு வரேன்.” என்று சஞ்சு புன்னகையோடு சொல்ல, ” ஹ்ம்ம், ஓகே” என்று சொல்லிவிட்டு பாத்ரூம் நோக்கி சென்றான் ஆர்யன்.
சில நிமிடங்களுக்குப் பிறகு, சஞ்சு இரண்டு ஆவி பறக்கும் காபி கோப்பைகளுடன் திரும்பி வந்தாள். ஆர்யன் சோபாவின் அருகே நின்று கொண்டு தலைமுடியை துண்டால் துடைத்துக் கொண்டிருந்தான், அவனது உடல் வெறுமையாக, நீர் துளிகளால் லேசாக பளபளத்தது. சஞ்சு உள்ளே சென்று ஒரு கோப்பையை அவனிடம் கொடுத்ததும், ஆர்யன் புன்னகையுடன் அவளிடமிருந்து அதை வாங்கிக் கொண்டு அமர்ந்தான், அவன் பார்வை அவள் முகத்தை விட்டு அகலவே இல்லை.
” இன்னைக்கு நாள் உனக்கு எப்படி இருந்துச்சு ? “ என்று ஆர்யன் கேட்டதும், சஞ்சு ஒரு பெருமூச்சு விட்டபடி அவன் அருகில் அமர்ந்து, “ரொம்ப போரடிச்சுது ஆனா பரவாயில்ல பழகிடும். பொழுத கழிக்க சீக்கிரம் வேற ஏதாவது வழி யோசிக்குறேன் “ என்று கூறினாள்.
ஆர்யன் மெதுவாக ஒரு மிடறு குடித்துவிட்டு யோசனையுடன் அவளைப் பார்த்து, ” படம் பார்க்க தியேட்டர் போகலாமா ? “ என்று கேட்டான். உடனே அவள் வியப்புடன் அவன் பக்கம் திரும்பி “உண்மையாவா?” என்று ஆச்சரியத்துடன் கேட்டாள்.
” வேண்டாமா?” என்று ஆர்யன் புருவத்தை உயர்த்தி கேட்டதும், “ முதல் முறை நீங்க தியேட்டர் போய் படம் பார்க்கலாமான்னு கேட்டதும் எனக்கு சர்ப்ரைஸா இருந்துச்சு வேற ஒண்ணுமில்ல, நாம போகலாம் “ என்று சஞ்சு சொன்ன போது அவள் உதடுகளில் புன்னகை தவழ்ந்தது.
அவள் வார்த்தையை கேட்டு ஆர்யன் சிரித்தபடி, “சரி, சீக்கிரம் ரெடியாகு.” என்று சொன்னான்.
சஞ்சு மெல்ல சிரித்து சரி என்று தலையசைத்தாள். இருவரும் வேகமாக சாதாரண உடை அணிந்து தயாரானதும், காரில் ஏறி மேன்ஷனை விட்டு புறப்பட்டார்கள்.
சஞ்சு ஆர்யனை ஒரு விசித்திரமான புன்னகையுடன் பார்த்து, ” நாம என்ன படம் பார்க்கப் போறோம்?” என்று கேட்டாள். அதற்கு ஆர்யன், ” ரொமான்ஸ் படம் பார்க்கலாம் “ என்றான்.
“ஆர்யன், நீ கேஷுவல்ஸ்ல ரொம்ப ஹாட்டா இருக்க ” என்று சஞ்சு அவனை ரசித்துக் கொண்டே சொன்னதை கேட்ட ஆர்யன், “அப்படியா? அப்போ ஃபார்மல்ல (formal ) நான் எப்படி இருப்பேன் ?” என்று கேட்டான்.
” நீ ஃபார்மல் பேன்ட், சட்டை போட்டா ஒரு அழகான ஹல்க் மாதிரி இருப்ப. மொத்தத்துல நீ எந்த டிரஸ் போட்டாலும் அப்படியே எனக்கு உன்ன கடிக்கணும் போல இருக்கும் “ என்று சஞ்சு சொன்னதும், ஆர்யன் சற்றே நெருக்கமாக சாய்ந்து, “அப்படியா? அப்போ நாம வீட்டுக்கு திரும்பி போகலாமா ?” என்று தனது ஹஸ்கி குரலில் கேட்டான்.
சஞ்சு அவன் தோளை தட்டியபடி சிரித்து, இல்ல இல்ல வேணாம், நாம படம் பார்க்க போகலாம் “ என்றாள்.
சிறிது நேரத்தில் அவர்கள் ஒரு மாலை (mall ) அடைந்ததும் ஆர்யன் காரை நிறுத்தினான். அவர்களைப் பின்தொடர்ந்த பாதுகாவலர்கள் அவர்களின் தனியுரிமையை மதித்து புத்திசாலித்தனமாக தூரத்தில் நின்றனர்.
ஆர்யன் மற்றும் சஞ்சு இருவரும் பொதுமக்களின் கவனத்தை தவிர்க்க மாஸ்க் அணிந்து தியேட்டருக்குள் சென்றனர். அங்கு மேனேஜர் ஏற்கனவே அவர்களுக்காகக் காத்திருந்தார்.
“சார், உங்களுக்கு ஏதாவது தேவைப்பட்டா எனக்கு மெசேஜ் பண்ணுங்க, நான் உடனே வரேன்” என்று மேனேஜர் பணிவாக சொன்னதும், “நன்றி” என்று ஆர்யன் தலையசைத்தான்.
சற்றே குழப்பத்துடன் காலியாக இருந்த தியேட்டரைச் சுற்றிப் பார்த்த சஞ்சு. “ஆர்யன், ஏன் தியேட்டர்ல யாருமே இல்லை?” என்று அவனிடம் கேட்டாள். அதற்கு ஆர்யன், “ஏன்னா நாம தனியா படம் பார்க்க இந்த தியேட்டர் மொத்தமா நான் புக் பண்ணிட்டேன், இப்போ நாம மட்டும் தனியா, யார் தொந்தரவும் இல்லாம படம் பார்க்க போறோம் ” என்று சாதாரணமாக பதில் சொன்னான்.
” அய்யோ கடவுளே !.” என்று சஞ்சு கண்களை அகல விரித்து முணுமுணுத்ததை பார்த்தா ஆர்யன், “இப்ப வா, உட்காரலாம்.” என்று அவளை அழைத்தான்.
விளக்குகள் மங்கியதும் இருவரும் வசதியான ஜோடி இருக்கையில் அமர்ந்தனர்.
“ரொமான்ஸ் படமா?” என்று புருவத்தை உயர்த்திக் கேட்ட சஞ்சு, ” உண்மைய சொல்ல போனா நானும் பவியும் இந்த ரொமான்ஸ் படம் பார்க்க பிளான் பண்ணி இருந்தோம் “ என்று கூறினாள். அதை கேட்ட ஆர்யன், ” இந்த மாதிரி ரொமான்ஸ் படம் எல்லாம் நீ என் கூட பார்க்கணும் பவித்ரா கூட இல்ல “ என்று அவள் காதில் கிசுகிசுத்தான்.
” நல்லது, இப்போ படம் ஆரம்பிக்க போகுது அதனால நீ என்ன தொந்தரவு பண்ணாத “ என்று சஞ்சு சொல்ல, அதற்கு ஆர்யன் அவளிடம், “ நான் வேணும்னா உன்ன தொந்தரவு செய்யாம பின்னாடி போய் உட்காரட்டுமா ? “ என்று கேட்டு கிண்டல் செய்தான்.
“என்ன பா ?” என்று சஞ்சு செல்லமாக கேட்டதும், “ ஏன்டி உன்ன ரொமான்ஸ் படம் பார்க்க கூட்டிட்டு வந்துட்டு, தொந்தரவு செய்யாதனு சொன்னா எப்படி ? “ என்று கேட்டு அவள் தோளில் கை போட்டான்.
” அதெல்லாம் வீட்டுக்கு போன அப்புறம் எவ்ளோ வேணும்னாலும் தொந்தரவு பண்ணு இப்போ வேணாம் “ என்று சஞ்சு சொல்ல, “ இந்த யோசனை எனக்கு புடிச்சு இருக்கு, இப்போ நீ படம் பாரு, நாம வீட்டுக்கு போனதும் மொத்தமா உன்ன தொந்தரவு பண்றேன் “ என்று சொல்லி குறும்பாக சிரித்தான்.
” சீ போடா ” என்று சொல்லி வெட்கத்துடன் சிரித்தாள் சஞ்சு.
படம் தொடங்குவதற்கு முன்பு, அவர்களுக்கு தின்பண்டங்கள் மற்றும் பானங்கள் வழங்கப்பட்டன. படம் ஓடிக்கொண்டிருக்க, அந்த காதல் ஜோடி மெல்ல மெல்ல அதன் தாளத்தில் தொலைந்து போனார்கள். படம் முடிவதற்குள், இருவரும் முழு நேரமும் கட்டிப்பிடித்து அமர்ந்திருப்பதை உணர்ந்தனர்.
“வாவ்… படம் செம்மையா இருந்துச்சுல ?” என்று ஆர்யன் கேட்க ” ஆமா, ஹீரோ ரொம்ப அழகா இருந்தாரு” என்றாள் சஞ்சு. அவள் வார்த்தையை கேட்ட ஆர்யன் சட்டென நின்று, “வீட்ல இருந்து கிளம்பும் போது நான் அழகா இருக்கேன்னு சொன்ன ? ” என்று அதிர்ச்சியோடு கேட்டான்.
“அவர் திரையில மட்டும் தான் பா ஹீரோ. ஆனா நீ என் நிஜ வாழ்க்க ஹீரோ. இப்போ பொசஸிவ் ஆகாம வா ஆர்யன்” என்று சொல்லி அவன் தலைமுடியை கோதிவிட்டாள் சஞ்சு.
இருவரும் பார்க்கிங் பகுதிக்கு நடந்து சென்ற போது, ரஞ்சித் ஏற்கனவே அவர்களுக்காக காத்திருந்தான்.
” அண்ணா, நீங்க ஏன் இங்க வெயிட் பண்ணிட்டு இருக்கீங்க ? “ என்று சஞ்சு கேட்டாள். அதற்கு ரஞ்சித், ” சும்மா ஒரு பாதுக்காப்புக்கு தான் மா “ என்று அவளிடம் கூறினான் பின்னர் ஆர்யனை பார்த்து, “சார், கௌசல்யா அம்மா வீட்ல டின்னர் ரெடி பண்ணியிருக்காங்க, வாங்க கிளம்பலாம். இந்த நேரத்துல வெளியே டின்னருக்கு போறது பாதுகாப்பு இல்ல “ என்று கூறினான்.
நிலைமையை ஏற்கனவே அறிந்த ஆர்யன் சரி என்று சம்மதித்தான்.
******************************************
முன்னோட்டம்:
“நான் கிளம்பறதுக்கு முன்னாடி நாம ரெண்டு பேரும் சேர்ந்து குளிக்கலாமா?”

1 comment
[…] Chapter 45 […]