டி.சி. இல்லத்தில், சந்திரசேகர் தனது அலுவலக அறையில் சிந்தனையில் ஆழ்ந்திருந்தார். பார்ட்டி முடிந்ததிலிருந்து, அவர் அலுவலகத்திற்கு காலடி எடுத்து வைக்கவில்லை. மகளின் கண்ணீர் நிறைந்த முகத்தின் பிம்பம் அவரை வாட்டி வதைத்துக் கொண்டே இருந்தது. அவள் தன் தோழிகளுடன் தங்கியிருந்தாலும் அவள் வேதனையில் இருக்கிறாள் என்றும், தான் அவளை ஏமாற்றிவிட்டதாகவும் நினைத்து வருந்தினார். அவளைப் பாதுகாப்பதாக அவர் வாக்களித்திருந்தார் ஆனால் ஆர்யன் சஞ்சனாவை பகிரங்கமாக உரிமை கோரிய போது ஒன்றும் செய்ய முடியாமல் நின்றதை நினைத்து சக்தியற்றவராக நின்றார்.
ஆர்யனின் விவகாரங்களில் இருந்து விலகி இருக்குமாறு மாயா எச்சரித்த பிறகு, அவர் தயக்கத்துடன் பின்வாங்கினார் ஆனால் தன்னை கட்டுப்படுத்த முடியவில்லை. ஆர்யனின் வாழ்க்கையில் இருந்து சஞ்சுவை எப்படியாவது அகற்றுவது தான் அவருக்கு இருந்த ஒரே வழி. ஆனால் இப்போது அவர்கள் தங்கள் திருமணத்தை உலகிற்கு அறிவித்துவிட்டதால், அந்த விருப்பம் கிட்டத்தட்ட சாத்தியமற்றதாகிவிட்டது. ஆர்யன் தன்னை சஞ்சுவின் அருகில் கூட நெருங்க விடமாட்டான் என்று அவர் அறிந்திருந்தார்.
அவரது எண்ண ஓட்டங்கள் அவரது PA ராஜேஷ் பேசிய போது தடைப்பட்டது.
“சார், ரஞ்சித் பார்ட்னர்ஷிப் சம்பந்தமாக சந்திக்க அப்பாயின்ட்மென்ட் கேட்டு போன் பண்ணினான். அது மட்டும் இல்ல ஏ.ஆர்.சி.யில நடக்குற உள்கட்டமைப்பு வேலைய பாத்துட்டு அதுல ஏதாவது மாற்றம் வேணும்னா பரிந்துரைக்க சொல்லி இருக்கான் “ என்று சொன்ன ராஜேஷ், சற்று இடைவெளி விட்டு, “ஏ.ஆர்.சி காஸ்மெடிக்ஸ் நிறுவனத்தோட இயக்குனர் குழுவுல ஒருத்தராவும், சேர்வுமனாவும் (chairwoman ) சஞ்சனா அதிகாரப்பூர்வமா நியமிக்கப்பட்டு இருக்காங்க ” என்று அனைத்து தகவலையும் சொன்னார்.
சந்திரசேகர் பின்னால் சாய்ந்து கைப்பிடியை விரல்களால் தட்டியபடி யோசித்தவர், இந்த சந்தர்ப்பம் தான் சஞ்சுவிடம் பேச சரியான வாய்ப்பாக இருக்கும் என நம்பினார்.
“ஏ.ஆர்.சி.யில் ஒரு மீட்டிங் ஏற்பாடு பண்ணு, அதுல சஞ்சனா, பிரதீப் இருக்கனும்னு சொல்லு. அப்படியே நாம அங்க நடக்குற வேலைய பார்வையிடுவோம்” என்று சந்திரசேகர் சொன்னதும், ” கண்டிப்பா சார். அவங்க மாயா மேடமும் மீட்டிங்கில இருக்கணும்னு சொல்லி இருக்காங்க “ என்று ராஜேஷ் கூறினார். அதற்கு சந்திரசேகர், “நான் அவ கிட்ட பேசுறேன்.” என்று சொல்லி மாயாவின் எண்ணை டயல் செய்தார். பல பதிலளிக்கப்படாத முயற்சிகளுக்குப் பிறகு, அவள் இறுதியாக அழைப்புக்கு பதில் சொல்லி, “அப்பா, நீங்க ஏன் எனக்கு போன் பண்றீங்க ?” என்று எரிச்சலுடன் கேட்டாள்.
” மாயா, பார்ட்னர்ஷிப் கையெழுத்து போட்டது உனக்கு ஞாபகம் இருக்கா இல்லையா ? “ என்று சந்திரசேகர் கேட்க அதற்கு மாயா, “ இப்ப அதுக்கு என்ன? எல்லாம் ரெடி ஆயிடுச்சா?” என்று அவரிடம் கேட்டாள்.
“இன்னும் இல்ல ஆனா நீ ARC டவர்ஸ் போய் ஒரு மீட்டிங்குல கலந்துக்கனும் “ என்று சந்திரசேகர் சொன்னதை கேட்டு, “ இந்த மீட்டிங் நடக்க காரணம் என்ன ? “ என்று மாயா கேட்டாள்.
“சஞ்சனா இப்போ ஏ.ஆர்.சி காஸ்மெடிக்ஸ் தலைவர் பொறுப்புல இருக்கா, நீ அவள நாளைக்கு சந்திக்கணும் “ என்றார் சந்திரசேகர்.
” இப்ப அவள பிசினஸ்லயும் இழுத்துட்டானா ? ” என்று மாயா முணுமுணுத்தாள். “சரி. நான் அங்க வரேன், எனக்கு டைம் மெசேஜ் பண்ணுங்க.” என்று சொன்னாள். அதை கேட்டதும், “மீட்டிங்ல நானும் கலந்துக்கறேன்… மாயா, நீ வீட்டுக்கு வரணும்னு நினைக்கிறேன்.” என்று தயங்கியபடி சொன்னார் அதற்கு அவள் சில நொடிகள் அமைதிக்கு பிறகு, “ நான் உங்களுக்குத் தெரியப்படுத்துறேன்,” என்று உணர்ச்சியற்ற குரலில் பதிலளித்து அழைப்பை துண்டித்தாள்.
சந்திரசேகர், ராஜேஷின் பக்கம் திரும்பி, “நாளைக்கு காலைல 11 மணிக்கு மீட்டிங்கை ஷெட்யூல் பண்ணு.” என்று சொன்னார்.
ஏ.ஆர்.சி. டவர்ஸில், ஆர்யன் தனது அலுவலகத்தின் ஜன்னலுக்கு அருகே நின்று கொண்டிருந்த போது உள்ளே நுழைந்த ரஞ்சித், “சார் சந்திரசேகர் நாளைக்கு காலைல 11 மணிக்கு மீட்டிங் கன்ஃபார்ம் பண்ணிட்டாரு. மாயாவும் வருவா ” என்று கூறினான். அதை கேட்டு, “ ஹ்ம்ம் சரி, பிரதீப், சஞ்சனாவுக்கு தகவல் சொல்லிடு “ என்று ஆர்யன் சொன்னதும் சரி என்று சொல்லி ரஞ்சித் வெளியேறினான்.
லேகாவின் வீட்டில், மாயா டைனிங் டேபிளில் உட்கார்ந்து உணவைத் தொடாமல், சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள்.
“மாயா, நீ ஏன் சாப்பிடாம இருக்க, உன் மனசுல என்ன இருக்கு?” என்று லேகா கவலையுடன் கேட்டாள். அதற்கு மாயா அவளிடம், “நாளைக்கு ஏ.ஆர்.சி.யில் பிரதீப், சஞ்சனா கூட ஒரு மீட்டிங் இருக்கு “ என்றாள் மாயா மெல்லிய குரலில்.
ரியா முகம் சுளித்து, “என்ன செய்யப் போற ?” என்று கேட்க, மாயா இருக்கையில் பின்னால் சாய்ந்து கொண்டு, ” நான் திரும்பி போக வேண்டிய நேரம் வந்துடுச்சு. ஆர்யன தேர்ந்தெடுத்ததுக்கு அவள கஷ்டப்படுத்துவேன் “ என்றாள் மாயா கண்களில் கோவத்தோடு.
ரியா அவளை கவலையுடன் பார்த்து, “மாயா, ஜாக்கிரதையா இரு. எதையும் செய்றதுக்கு முன்னாடி ஒருமுறைக்கு ரெண்டு முறை யோசி” என்று சொன்னாள், அவளை தொடர்ந்த ரியா, “ வார இறுதியில எங்க கூட வா. உனக்கு கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கும் “ என்று சொன்னாள்.
மாயா லேசாகத் தலையசைத்து, “ஹ்ம்ம். கண்டிப்பா வரேன். இன்னைக்கு சாயங்காலம் நான் கிளம்புறேன்.” என்று சொன்னாள்.
அடுத்த நாள் ஆர்யனும் சஞ்சனாவும் ஒன்றாக அலுவலகத்திற்கு வந்தனர். ஊழியர்களுக்கு வணக்கம் தெரிவித்துவிட்டு, நடக்க போகும் மீட்டிங்கிற்கு தயாராக சஞ்சனா தனது அறைக்கு சென்றாள். சில நிமிடங்கள் கழித்து, பிரதீப் கையில் ஒரு ஃபைளுடன் அவள் அறைக்கு சென்றான்.
“சஞ்சனா, ARC சார்பா வேலை செய்ய போற ஊழியர்கள பத்தி நாம எல்லா விவரமும் தெரிஞ்சிக்கணும் “ என்று பிரதீப் சொல்ல, “ ஆமா, மீட்டிங் போறதுக்கு முன்னாடி உங்க டீம்ல வேலை செய்ய போறவங்களோட லிஸ்ட் ஆர்யன் கிட்ட இருக்கு, அத நீங்க அவங்களுக்கு ஈமெயில் மூலம் தெரியப்படுத்திடுங்க. மீட்டிங் அப்போ அந்த விவரங்கள மாயா கிட்டயும் ஒப்படைப்போம்” என்றாள் சஞ்சு.
“மாயா ஆக்ரோஷமா நடந்துக்க வாய்ப்பு இருக்கு, நாம அவள வித்தியாசமா கையாளனும் “ என்று சொன்ன பிரதீப் கவலையுடன் காணப்பட்டான். அதற்கு சஞ்சு, “ கவலைப்படாத பிரதீப், மீட்டிங் நடக்கும் போது அவ எதுவும் பிரச்சன செய்ய மாட்டா. அவ என்ன செய்றதா இருந்தாலும் நான் அவ கூட தனியா இருக்க சந்தர்பத்துக்கு தான் வெயிட் பண்ணுவா “ என்று சொன்னாள். அதற்கு பிரதீப் உடனே, ” அப்போ நீ அவள தனியா சந்திக்காம இரு “ என்று கூறினான்.
சஞ்சனா ஒரு சிறு புன்னகையை உதிர்த்து, “அது கஷ்டமா இருக்கும் பிரதீப். நாம பிசினெஸ் செய்றோம், அவள பார்க்கமா தவிர்க்க முடியாது ஆனா கவலைப்பட வேணாம். மாயாவையும் அவ அப்பாவையும் நான் இதுக்கு முன்னாடி கையாண்டிருக்கேன். அவங்கள எப்படி சமாளிக்கனும்னு எனக்குத் தெரியும்.” என்று அமைதியாக கூறினாள்.
பிரதீப் தன் வாட்சில் நேரத்தை பார்த்துவிட்டு, “ கான்ஃபரன்ஸ் ரூமுக்குப் போகலாம். அவங்க எப்போ வேணும்னாலும் வந்துடுவாங்க “ என்று சொன்னான்.
சந்திரசேகரும், மாயாவும் ஏ.ஆர்.சி டவர்ஸுக்கு வந்ததும், வரவேற்பாளர் அவர்களை அன்புடன் வரவேற்று உடனடியாக ரஞ்சித்திற்கு தகவல் கொடுத்தார். அவன் உடனடியாக அவர்களை அலுவலகத்துள் அழைத்துச் சென்றார்.
“ரஞ்சித், அடுத்த முறை நாங்க ஆபீஸ் உள்ள நுழைய அணுகல் இருக்க மாதிரி ஏற்பாடு செய், நான் இங்க வந்து காத்திருக்க விரும்பல “ என்று மாயா கூறியதை கேட்டு, “மிஸ் மாயா, நான் இத பத்தி சஞ்சனா கிட்ட சொல்றேன். அவங்க இத பத்தி பேசுவாங்க “ என்றான் ரஞ்சித்.
“என்ன சொல்ற ?” என்று எரிச்சலுடன் மாயா கேட்க, “ எந்த ஒரு தகவலையும் சொல்ற அதிகாரம் எனக்கு இல்ல “ என்று தொழில்முறை தொனியில் கூறி, சஞ்சனாவும் பிரதீப்பும் ஏற்கனவே காத்திருந்த கான்ஃபரன்ஸ் அறைக்கு அவர்களை அழைத்துச் சென்றான் ரஞ்சித். அவர்கள் உள்ளே நுழைந்ததும், மாயாவின் அணுகல் கோரிக்கையைப் பற்றி ரஞ்சித் ரகசியமாக சஞ்சனாவிடம் தெரிவித்தான்.
அவர்களை வரவேற்க சஞ்சனாவும், பிரதீப்பும் எழுந்து நின்றனர்.
“குட் மார்னிங், ப்ளீஸ் உட்காருங்க.” என்றாள் சஞ்சனா புன்னகையுடன்
பிரதீப் ஆவணங்களை வழங்கியதும் மீடிங்க தொடங்கியது. அவன் வணிக நடவடிக்கைகள், பணியாளர் விவரங்கள், சந்தைப்படுத்தல் உத்திகள் மற்றும் ARC காஸ்மெடிக்ஸ் சம்மந்தமான அனைத்தும் பேசினான்.
மாயாவும் சந்திரசேகரும் ஆவணங்களை மிகுந்த ஆர்வத்துடன் பரிசீலித்தனர். சிறிது நேர கலந்துரையாடலுக்குப் பிறகு சஞ்சனா அவர்களிடம் பேசினாள்.
“மிஸ் மாயா, இன்னும் பத்து நாள்ல நாம ஒன்னா இங்க வேலை செய்ய தொடங்குவோம். அந்த நாள்ல இருந்து பொது நுழைவாயில் அப்புறம் 42 வது மாடிக்கு மட்டும் உங்களுக்கு அணுகல் இருக்கும். நீங்க என்ன சந்திக்கணும்னா ரஞ்சித் உங்கள என்னோட ரூமுக்கு அப்போ மட்டும் கூட்டிட்டு வருவாரு. DC குழுமத்துல இருந்து இங்க வந்து வேலை செய்ய போறவங்க தகவல் கொடுத்ததும் அவங்களுக்கு ID கார்டு, அணுகல் கார்டு எல்லாம் கொடுக்க ஏற்பாடு செய்யப்படும். “ என்று சொன்ன சஞ்சு பின்னர் நிதானமாக, “வேற ஏதாவது கேட்க இல்ல சொல்ல விரும்புறீங்களா?” என்று அவள் தனது தொனியை சம்பிரதாயமாக வைத்துக் கொண்டு கேட்டாள்.
மாயா ஆம் என்று தலை அசைத்து, “நான் உங்களையும் ஆர்யனையும் அடிக்கடி பிசினஸ் விஷயமா சந்திக்க வேண்டி இருக்கும் அதனால ஒவ்வொரு முறையும் ரஞ்சித் கிட்ட கேட்டுட்டு இருக்க முடியாது மிஸ் சஞ்சனா “ என்று கூறினாள்.
சஞ்சனா மெல்லிய புன்னகையோடு மாயாவிடம், “மிஸ் மாயா, நான் மிஸஸ் சஞ்சனா ஆர்யன். அப்புறம் ஆர்யன் இனி ஏ.ஆர்.சி காஸ்மெடிக்ஸ் பிசினஸ்ல தலையிட மாட்டாரு, அதனால அவர சந்திக்க வேண்டிய அவசியம் உங்களுக்கு இருக்காது. பிசினஸ் சம்மந்தமா எல்லாமே பிரதீப் பார்த்துக்குவாரு. என் தலையீடு தேவைப்பட்டா அவர் என்ன அணுகுவாரு. நம்ம சந்திக்க வேண்டிய அவசியம் கூட குறைவா தான் இருக்கும் “ என்று சொன்ன போது அவள் குரல் உறுதியாக இருந்தாலும் நிதானமாக இருந்தது.
சந்திரசேகர் சற்றே சாய்ந்து, “நான் இப்போ ஆர்யன பர்சனலா சந்திக்க விரும்புறேன் சஞ்சனா, நாம இந்த பிசினஸ் செய்ய ஆரம்பிக்குறதுக்கு முன்னாடி பர்சனலா உறவு இருக்குனு நீ புரிஞ்சுக்கணும்.” என்று சொன்னார்.
“புரியுது சார், அவர நேர்ல சந்திக்க, நீ எப்போ வேணும்னாலும் அவருக்கு போன் பண்ணிட்டு நேர்ல சந்திக்கலாம். அவர் உங்கள நேர்ல சந்திக்க எப்பவும் சந்தோஷப்படுவாரு. நாங்க உங்கள ரொம்ப மதிக்கிறோம். ரஞ்சித் கிட்ட சொல்லி உங்கள கூட்டிட்டு சொல்றேன் “ என்று சஞ்சனா நிதானமாக சொன்னாள் ஆனால் அவளின் வார்த்தை ஒவ்வொன்றும் அவளின் நேர்மை, தெளிவு மற்றும் கூர்மையை வெளிப்படுத்தியது.
” ஆர்யன் உனக்கு நல்லா பயிற்சி கொடுத்துருக்கான் “என்று அவர் ஒரு மெல்லிய புன்னகையுடன் கூறினார். அதற்கு சஞ்சு, ” அவர் எனக்கு வாழவும், மத்தவங்கள வாழ விடவும் சொல்லி கொடுத்துருக்காரு “ என்றாள்.
சந்திரசேகர் மீண்டும் புன்னகைத்து விட்டு மாயாவை பார்த்து, “மாயா, இங்கேயே இரு. ஆர்யன சந்திச்சிட்டு வரேன் “ என்று சொல்லி ரஞ்சித்துடன் சென்றார்.
மற்ற வேலைகளை கவனிக்கும்படி பிரதீப்பிடம் சஞ்சு சொல்ல, சஞ்சனாவையும் மாயாவையும் மட்டும் அறையில் விட்டுவிட்டு பிரதீப் அங்கிருந்து சென்று மற்ற வேலைகளை கவனிக்க முடியாமல் தவித்தான்.
மாயா மௌனத்தைக் கலைத்து, ” உன் வாழ்க்கை எப்படி போகுது ?” என்று கேட்டாள். அதற்கு சஞ்சு அவளிடம், “நல்லா போகுது மாயா” என்றாள் அமைதியாக.
“ஆர்யனோட அப்பாவும், அம்மாவும் இறந்த அப்புறம் அவர் ரொம்ப பலவீனமா உடைஞ்சு போய் இருந்தாரு. அப்போ நாங்க தான் அவருக்கு ஆதரவா இருந்தோம் ஆனா இப்போ அவர் முழுசா வளர்ந்து நிற்கும் போது நீ அவர் வாழ்க்கையில திடீர்னு வந்து குதிச்சு இருக்க “ என்று மாயா வெறுப்புடன் சொன்னதும், “ நான் திடீர்னு குதிச்சு வரல மாயா. நாங்க கல்யாணத்துக்கு முன்னாடி ஒரு வருஷத்துக்கும் அதிகமா லவ் பண்ணிட்டு இருந்தோம் அதனால எங்க வாழ்க்கைய பத்தி அனுமானங்கள உருவாக்குற நிறுத்து “ என்றாள் சஞ்சு உறுதியாக.
மாயா முன்னால் குனிந்து, ” எத்தனை நாளைக்கு இத அனுபவிக்கப் போற?” என்று கேட்டாள், அவள் குரலில் கிண்டல் தொனித்தது.
” வாழ்க்க முழுக்க ” என்றாள் சஞ்சனா தயக்கமின்றி.
” கனவு கண்டுட்டு இரு சஞ்சனா, உன்னோட நாட்கள எண்ணு. இதுக்காக நீ வருந்தி ஆர்யன நீயே விட்டுட்டு போக போற. அது நடக்க நான் உறுதி செய்றேன்.” என்றாள் மாயா கோவத்துடன் அதுவரை பொறுமையாக இருந்த சஞ்சனா கண்கள் பளிச்சிட எழுந்து நின்றாள். “வாயை மூடு மாயா. இன்னொரு வார்த்த பேசாத. அப்படி யோசிக்க கூட செய்யாத. நாங்க உன் அப்பாவ மதிக்கிறோம் ஆனா அதுக்காக உன் முட்டாள்தனத்த நாங்க பொறுத்துக்குவோம்னு அர்த்தம் இல்ல. உனக்கு காபி ஸ்நேக்ஸ் கொடுக்க சொல்றேன், சாப்பிட்டு முடிச்சிட்டு உன் அப்பா திரும்பி வரவரைக்கும் இங்கேயே வெயிட் பண்ணு “ என்று சீறிவிட்டு சஞ்சனா வெளியே சென்றாள்.
இதற்கிடையில் சந்திரசேகர் ஆர்யனின் அறைக்குள் நுழைந்ததும் ஆர்யன் இருக்கையிலிருந்து எழுந்து மரியாதையுடன் வரவேற்றான்.
” வெல்கம் சார். மீட்டிங் சுமூகமாக நடந்திருக்கும்னு நம்புறேன்” என்று ஆர்யன் சொன்னதும், “ஆமா ஆர்யன். நீ அவளுக்கு நல்லா பயிற்சி கொடுத்துருக்க “ என்று சந்திரசேகர் குறிப்பிட்டார்.
ஆர்யன் புன்னகைத்து ” சஞ்சு ரொம்ப அப்பாவி, தனிப்பட்ட முறையில எல்லார் மேலையும் ரொம்ப அன்பா, அக்கறையா இருப்பா ஆனா பிசினஸ்ல நம்பமுடியாத அளவுக்கு திறமையானவ “ என்று தன் மனைவியை பாராட்டினான்.
“பிசினஸ் ஆரம்பிச்சதும் மாயா இங்க தினமும் வேலை செய்யப் போறா. நீ அவள கவனிச்சுக்கனும்னு நான் விரும்புறேன். அவ ஏற்கனவே ரொம்ப காயப்படிருக்கா அதுக்கு மேல எந்த அவமானத்தையும் தொந்தரவையும் நான் விரும்பல.” என்று சந்திரசேகர் சொன்னதும், “ சார், கனடாவுல அவங்க எவ்ளோ சுதந்திரமா இருந்தாங்கன்னு உங்களுக்குத் தெரியும். அவங்கள பார்த்துக்க ஒரு ஆள் தேவைப்படாது. இங்க ARCயில எல்லோரும் தொழில் ரீதியாக ஒழுக்கமா இருப்பாங்க, எந்த பிரச்சனையும் வராது “ என்று ஒரு நொடி கூட யோசிக்காமல் சொன்னான் ஆர்யன்.
“இருந்தாலும் அவள பத்திரமா பார்த்துக்கோ – எனக்காக.” என்று சந்திரசேகர் மீண்டும் கேட்க, “ சஞ்சனா கிட்ட சொல்லி பார்த்துக்க சொல்றேன் சார். நான் மத்த பிசினஸ் பாக்குறதுல பிஸியா இருப்பேன் ஆனா அவங்க நல்லா இருக்குறத நான் உறுதி செய்றேன் “ என்றான் ஆர்யன்.
“மாயா தான் என் உலகம்னு உனக்குத் தெரியும். அவளுக்காக நான் எதையும் செய்வேன். நான் இப்ப கிளம்பறேன்.” என்று சந்திரசேகர் சொல்ல, ஆர்யன் தலையசைத்துவிட்டு சந்திரசேகருடன் லிப்டுக்கு சென்றான். சந்திரசேகர் மாயா இருக்கும் தளத்தை அடைந்த போது சஞ்சனா அறைக்கு வெளியே காத்திருப்பதைக் கண்டார்.
“ஹலோ சார், ஆர்யன் கூட நல்லா பேசி இருப்பீங்கனு நம்புறேன் “ என்று சஞ்சு சொல்ல, “ ஆமா சஞ்சனா, என் மாயாவ பார்த்துக்க சொல்லி இருக்கேன். என் பொண்ணோட சந்தோஷத்துக்காக நான் எந்த எல்லைக்கும் போவேன்னு அவனுக்கு தெரியும். இப்போ, நான் முன்னாடி சொன்ன ஒப்பந்தம் பத்தி பேசலாம். இந்த முறை open deal. நீ எத வேணும்னாலும் கேளு, நான் அத உனக்கு தர தயாரா இருக்கேன், இது என்னோட வாக்குறுதி. ஆர்யன விட்டுடு. இத ஒரு வேண்டுகோளா எடுத்துக்கலாம், ஒரு உத்தரவு, இல்ல மிரட்டலா கூட எடுத்துக்கலாம். என் பொண்ணோட சந்தோஷம் மட்டும் தான் எனக்கு முக்கியம், அவளோட சந்தோஷம் ஆர்யனா இருந்தா, அத நிறைவேத்த எந்த எல்லைக்கும் போவேன். நான் என் விளையாட்ட ஆரம்பிக்குறதுக்கு முன்னாடி உனக்கு ஒரு வாய்ப்பு, டீல் தரேன். முடிவு எடுத்துட்டு சொல்லு “ என்று சந்திரசேகர் சொல்லி முடித்தார்.
சஞ்சனா அவர் பார்வையை சிறிதும் தயங்காமல் நேருக்கு நேர் சந்தித்து, “சார், நீங்க ஒரு PAவ அவளோட பாஸ் விட்டுட்டு போகச் சொல்லல, கேர்ள்பிரண்ட்ட அவளோட பாய்பிரண்ட்ட விட்டு பிரிய சொல்லல, ஒரு மனைவிய அவ புருஷன விட்டு போக சொல்றீங்க. உங்க பொண்ணு என் இடத்துல இருந்தா இத செய்வீங்களா? ஏன் ஆர்யன் கிட்ட என்ன விட்டு போக சொல்ல மாட்டேங்குறீங்க? ஏன்னா அவர் என்ன விட மாட்டார்னு உங்களுக்குத் தெரியும். அப்போ நான் மட்டும் அப்படி செய்வேன்னு நீங்க எப்படி எதிர்பார்க்க முடியும்? “ என்று கேட்ட சஞ்சு ஒரு புன்னகையுடன், “ நீங்க இப்போ பேசினத நான் ஆர்யன் கிட்ட சொன்னா என்ன செய்வீங்க ? என்று கேட்டாள்.
சஞ்சுவின் வார்த்தை அவளின் கேள்வியால் சந்திரசேகர் அமைதியாகப் புன்னகைத்தார். “உனக்கு இன்னும் பயிற்சி தேவை சஞ்சனா. நீ அவன் கிட்ட சொல்லத் தேவையில்ல, அவன் ஏற்கனவே நாம பேசுறத கேட்டுட்டு தான் இருக்கான் “ என்று சொன்னார்.
சஞ்சனா தன்னிச்சையாக திரும்பி ஆர்யனை தேடினாள், ஆனால் ஆர்யன் அவள் கண்ணில் படவில்லை அதனால் அவள் சந்திரசேகரை குழப்பத்துடன் பார்த்தாள்.
“ நான் அவனுக்கு பல விஷயத்துல வழிகாட்டியா இருந்துருக்கேன், அவன் எப்படி செயல்படுவான்னு எனக்குத் தெரியும். உன் முடிவை எனக்குத் தெரியப்படுத்து ” என்று சந்திரசேகர் சொன்னதும், “முடிவெடுக்க ஒண்ணுமில்ல, நான் இந்த ஜென்மத்துல ஆர்யன விட்டுப் பிரிய மாட்டேன்.” என்றாள் சஞ்சு உறுதியாக.
“ஸ்மார்ட், அப்புறம் பார்க்கலாம் ” என்று தலையசைத்தபடி சொன்ன சந்திரசேகர், கிளம்ப நேரமாகிவிட்டது என்று சமிக்ஞை செய்து திரும்பி மாயாவை அழைத்தார்.
****************************
முன்னோட்டம்:
” நிறைய டிரஸ் எடுத்துட்டு வராதா மா. ஞாபகம் இருக்கட்டும் நாம ஹனிமூன் போறோம் அதனால உனக்கு நிறைய டிரஸ் தேவைப்படாது “

1 comment
[…] Chapter 56 […]