ஆர்யன் தன் இருக்கையில் அமர்ந்திருந்தான், அவனது கண்கள் லேப்டாப் திரையில் நிலைகுத்தியிருந்தன. சந்திரசேகர் மற்றும் சஞ்சனா இடையேயான உரையாடலின் நேரடி ஆடியோ ரெகார்டிங் தெளிவாக ஓடியது. அவர்களின் உரையாடலின் ஒவ்வொரு சொல்லுக்கும் அவன் தாடை இறுகியது. கோபத்தை அடக்க முடியாமல் மேஜையிலிருந்த பூச்சாடியை எடுத்து அறையின் குறுக்கே வீசினான். அது தரையில் இழுந்து துண்டுகளாக சிதறியது.
“சார் அமைதியா இருங்க” என்று கவலையுடன் ரஞ்சித் அவனை அமைதிப்படுத்த முயன்றான்.
“நான் அவர ரொம்ப மதிக்கிறேன் ஆனா அவர் எல்லையைத் தாண்டி போறாரு. அவர் எப்படி சஞ்சனாவ மிரட்ட முடியும்?” என்று பேசிய ஆர்யனின் குரலில் கோவம் நிறைந்திருந்தது.
“ஆனா சஞ்சு அவருக்கு தைரியமா பதில் சொல்லி இருக்கா, நீங்க ஒண்ணும் கவலைப்படாதீங்க சார்.” என்று ரஞ்சித் அவனது கோபத்தை தணிக்க முயன்றான் ஆனால் ஆர்யன் மறுத்து தலையை ஆட்டினான்.
“ரஞ்சித், சஞ்சுவோட பாதுகாப்பை பலப்படுத்து, மாயாவ அவ பக்கத்துல விடாத.” என்று ஆர்யன் கடுமையாக உத்தரவிட்டான். அதற்கு ரஞ்சித் உடனே, “கண்டிப்பா சார். ஆனா இப்போ அவங்க பேசின விஷயம் உங்களுக்கு தெரியும்னு சஞ்சுவுக்கு தெரிஞ்சா உங்கள நிறைய கேள்வி கேட்பா “ என்று சொன்னான்.
“நான் பார்த்துக்குறேன், ரம்யாவுக்கு கண்டிப்பான உத்தரவு சொல்லு. சஞ்சுவோட ஆபீஸ் டிரஸ் எல்லாத்துலையும் வயர்லெஸ் மைக் தவறாம பொருத்த சொல்லு. அப்படியே அத ஜி.பி.எஸ் இணைக்க முடியுமா பாரு “ என்று ஆர்யன் கேட்டதும், “செக் பண்ணிட்டு சொல்றேன் சார். இல்லனா கூட நம்ம செக்யூரிட்டி டீம் கிட்ட சொல்லி அது மாதிரி ஒரு மைக் டிசைன் பண்ண சொல்லிடலாம் “ என்று ரஞ்சித் கூறினான்.
இதற்கிடையில், அன்று மாலை சஞ்சு பால்கனியில் அமர்ந்து, சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள், மாலை காற்று அவள் கூந்தலுடன் விளையாடிய போது அவள் கண்கள் தொலைவில் இருந்தன. ஆர்யன் அறைக்குத் திரும்பி அமைதியாக குளித்து தயாரானான் ஆனால் அவள் இன்னும் தன் உலகத்தில் தொலைந்து போயிருப்பதை உணர்ந்தவன், பால்கனியை நோக்கி நடந்து அவளுக்குப் பக்கத்தில் இருந்த இருக்கையில் அமர்ந்தான்.
“சஞ்சு” என்று அவன் பெயர் சொல்லி அழைக்கும் போதே அவள் சிந்தனையில் இருந்து விடுபட்டு “ஹ்ம்ம்… எப்ப வந்தீங்க?” என்று கேட்டாள்.
“நான் வந்து குளிச்சு கூட முடிச்சிட்டேன், நீ என்ன யோசிக்குற ?“ என்று ஆர்யன் அவளை மெல்ல கேட்டான். அதற்கு சஞ்சு, “ஆர்யன், மாயாவோட அப்பா உன்கிட்ட என்ன பேசினாரு ? “ என்று அவனிடம் கேட்டாள். ஆர்யன் இருக்கையில் வசதியாக சாய்ந்து கொண்டு, “ ஒண்ணுமில்ல மா, சாதாரணமா எப்படி இருக்கேன்னு கேட்டுட்டு கிளம்பிட்டாரு. ஏன் என்ன ஆச்சு ? “ என்று மீண்டும் அவளிடம் கேள்வி கேட்டான்.
” நானும், அவரும் பேசிட்டு இருந்தத நீ கேட்டுட்டு இருக்கனு அவர் சொன்னாரு. அப்போ சுத்தி பார்த்தேன் ஆனா நீ அங்க இல்ல. நீ நிஜமாவே நாங்க பேசினத கேட்டியா ? “ என்று சஞ்சு அவனிடம் கேட்க, “இல்லை மா, ஒருவேளை அவர் உன் மனச குழப்ப முயற்சி பண்ணி இருக்கலாம், அவர் என்ன சொன்னாரு ?” என்று எதுவும் தெரியாதவன் போல ஆர்யன் கேட்டான். அதற்கு சஞ்சு, “ஒண்ணுமில்ல, உன்ன விட்டு போக சொன்னாரு “ என்று சொன்னாள்.
சஞ்சுவின் வார்த்தையை கேட்டு அதிர்ச்சியான ஆர்யன், “ அடிப்பாவி இவ்ளோ சாதாரணமா சொல்ற ? “ என்று அவளிடம் கேட்டான், அதற்கு அவள், ” அவர் தான் காமெடி பன்றாருனா நான் ஏன் சீரியஸா இருக்கணும்? “ என்று சொன்னாள்.
“கரெக்ட் தான் ” என்று சொன்ன ஆர்யன், “ நீ அவர் கிட்ட என்ன சொன்ன?” என்று அவளை கேட்டான். சஞ்சு கொஞ்சமும் யோசிக்காமல், “நான் யோசிச்சு சொல்றேன்னு சொன்னேன் “ என்றாள்.
” ஒய் என்னடி சொல்ற ? “ என்று ஆர்யன் அதிர்ச்சியில் கேட்டதும், அவனது ரியாக்ஷனை பார்த்து சஞ்சு சத்தமாக சிரித்தாள். “நான் சும்மா சொன்னேன் பா. நான் எப்படி உன்ன விட்டு போவேன் ? என் உயிர் போனா தான் அது நடக்கும் “ என்று சஞ்சு பதில் சொன்னாள், அதை கேட்டதும், “ஏன் இப்படி பேசுற நீ ?” என்று ஆர்யன் அவள் வார்த்தைகளை விரும்பாமல் முகம் சுளித்தான்.
“சரி, அத விடு, எனக்கு பசிக்குது நாம சாப்பிடலாமா?” என்று சஞ்சு கேட்டதும், ஆர்யன் பதிலுக்கு வெறுமனே சரி என்று முணுமுணுத்து, மெதுவாக அவள் கையைப் பிடித்துக் கொண்டான். இருவரும் வெளியேறி டைனிங் ஹாலை அடைந்தனர். கௌசல்யா இருவருக்கும் இரவு உணவை பரிமாறிய போது, “கௌசல்யா மா, நீங்க ஸ்வீட் எதுவும் செய்யலையா? ஸ்வீட் சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு.” என்று கேட்டான் ஆர்யன்.
சஞ்சு அவனை முறைத்து, “ உனக்கு கொழுப்பு அதிகம் ஆயிடுச்சு “ என்று மெல்ல முனுமுனுத்தாள்.
“உங்களுக்கு என்ன வேணும் சார்? நான் உடனே ரெடி பண்ணிடறேன்.” என்று கௌசல்யா கேட்டதும், “இல்லை, பரவாயில்லை” என்றான் ஆர்யன் சிறு புன்னகையுடன்.
இரவு உணவுக்குப் பிறகு, அவர்கள் தங்கள் அறைக்குத் திரும்பியதும், சஞ்சு திடீரென ஆர்யனின் காலரைப் பிடித்து அவன் தோளில் விளையாட்டுத்தனமாக அடித்தாள்.
“ஆஹ்ஹ்ஹ் வலிக்குது பேபி” என்று ஆர்யன் சொல்ல, “ நல்லா வலிக்கட்டும், என்ன பேச்சு பேசுற நீ ? “ என்று சொன்னாள் சஞ்சு.
“இப்ப நான் என்னடி தப்பா சொன்னேன் ? “ என்று ஆர்யன் கேட்க, “ எங்க வந்து ஸ்வீட் கேட்குற நீ ? “ என்று கேட்டு சஞ்சு அவனை கண்களை சுருக்கி முறைத்தாள்.
” அடியே! நான் நிஜமாவே ஸ்வீட் தான்டி கேட்டேன், நீ தான் அத நம்ம ஸ்வீட்னு நெனச்சுட்ட போல “ என்று கிண்டலாக சிரித்தான். அதற்கு சஞ்சு, “ நடிக்காதா, உன்ன பத்தி எனக்கு தெரியாது “ என்று கூறினாள்.
அவள் மேலும் பேசுவதற்குள் ஆர்யன் அவள் மணிக்கட்டைப் பிடித்து வேகமாக அவளைச் சுவரில் சாய்த்தான். அவனது உடல் அவளது உடலோடு நெருக்கமாக அழுந்த, கண்கள் ஆசையுடன் அவளது கண்களையே பார்த்துக் கொண்டிருந்தன. அவன் தன் உதடுகளை அவள் உதடுகளில் பதித்தான்.
அந்த முத்தம் ஆழமானது, அவசரமானது, நுகரக்கூடியது, இறுதியாக அவர்கள் மூச்சிரைக்க பிரிந்ததும், ஆர்யன் அவளது சிவந்த முகத்தைப் பார்த்தான், திருப்தியான புன்னகை அவன் உதடுகளில் வளைந்தது.
” இது தான் எனக்கு புடிச்ச ஸ்வீட், செம்ம டேஸ்ட் “ என்று கண்ணடித்தபடி சொல்லிவிட்டு படுக்கையை நோக்கி நகர்ந்தான்.
சஞ்சு தலையை அசைத்துவிட்டு மெதுவாக நடந்து சோபாவை நோக்கி சென்று அவனுக்கு எதிரே அமர்ந்ததும், “இப்போ சொல்லு, உன்னோட மீட்டிங் எப்படி போச்சு ? “ என்று ஆர்யன் கட்டிலில் சாய்ந்தபடி கேட்டான்.
” நல்லா தான் போச்சு, மாயா உன்ன சந்திக்க நாம இருக்க தளத்துக்கு அணுகல் (access ) கேட்டா. அவளுக்கு உன்கிட்ட பேச எந்த அவசியமும், வேலையும் இல்லனு சொல்லி நான் மறுத்துட்டேன். உனக்கும் காஸ்மெடிக்ஸ் பிசினஸ்க்கும் எந்த தொடர்பும் இல்லனு சொல்லிட்டேன் “ என்று சஞ்சு சொன்னதை கேட்டதும், “ஹ்ம்ம், நீ புத்திசாலி, வேற என்ன நடந்துச்சு ? ” என்றான் ஆர்யன் கேட்டான்.
“ஒண்ணுமில்ல, வழக்கமான பிசினஸ் பேச்சுதான்” என்றாள் சஞ்சு சாதாரணமாக.
“ நீ எல்லாத்தையும் என்கிட்ட சொல்லனாலும், மாயாவையும் அவ அப்பாவையும் நீ கையாண்ட விதம் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு “ என்று மனதில் நினைத்துக்கொண்டான் ஆர்யன்.
அவனது மௌனத்தை உணர்ந்த சஞ்சு, ” என்ன யோசிக்குற ? “ என்று கேட்டாள்.
” ஒண்ணுமில்ல, நாம மாலத்தீவு போக இன்னும் மூணு நாள் தான் இருக்கு “ என்று ஆர்யன் சொல்ல, “ஹ்ம்ம், நான் பேக் பண்ண ஆரம்பிச்சுடறேன்” என்றாள் சஞ்சு மெல்லிய தலையசைப்புடன். அதற்கு ஆர்யன், “என்ன பேக் என்ன போற ? “ என்று ஆர்வத்துடன் கேட்டான். அவனது ஆர்வத்தை பார்த்த சஞ்சு, ” என்ன பேக் பண்ணுவாங்க ? டிரஸ் அப்புறம் தேவையான மத்த பொருளும் தான் “ என்று பதில் சொன்னாள்.
” நிறைய டிரஸ் எடுத்துட்டு வராதா மா. ஞாபகம் இருக்கட்டும் நாம ஹனிமூன் போறோம் அதனால உனக்கு நிறைய டிரஸ் தேவைப்படாது “ என்று ஆர்யன் கள்ளச் சிரிப்புடன் கிண்டல் செய்தான். அவன் சொன்னதை கேட்டதும், சஞ்சுவின் கண்கள் விரிந்தன. ” அய்யோ கடவுளே! ஆர்யன் நீ ரொம்ப பச்சையா பேசுற “ என்று சொல்லி அருகில் இருந்த குஷனை அவன் மேல் எறிந்தாள்.
” உன்கிட்ட தானே பேசுறேன், சரி இப்போ வா தூங்குவோம். மாலைதீவு போறதுக்கு முன்னாடி முடிக்க வேண்டிய வேலை நிறைய இருக்கு “ என்று ஆர்யன் சொன்னான்.
” தூங்கு, உன்ன யாரு வேண்டாம்னு சொன்னா ? “ என்று சொல்லி சஞ்சு முகத்தைத் திருப்பிக் கொண்டாள். ஆர்யன் சிரித்தபடி எழுந்து எந்த முன்னறிவிப்பும் இல்லாமல், அவளை கைகளில் தூக்கி கட்டிலில் படுக்க வைத்து அவனும் அருகில் படுத்து அவளை அணைத்துக் கொண்டு, “ இப்போ என்னால தூங்க முடியும் “ என்று திருப்தியுடன் சொன்னான்.
சஞ்சு சிரித்தபடி அவன் நெற்றியில் மென்மையாக முத்தமிட்டு அவன் மார்பில் தலை சாய்த்து உறக்கத்தில் ஆழ்ந்தாள்.
அடுத்த நாள், ரஞ்சித் பிரதீப்புடன் ஆர்யனின் அறைக்குள் நுழைந்தபோது ஆர்யன் தனது வேலையில் மூழ்கியிருந்தான்.
“சார், இன்னும் மூணு நாள்ல கீர்த்தி வந்துடுவாங்க ” என்று ரஞ்சித் சொன்னதும், “அவங்க தங்க ஏற்பாடு பண்ணிட்டியா ?” என்று ஆர்யன் கேட்டான்.
” பண்ணியாச்சு சார், நான் அவங்கள மேன்ஷன்ல தங்கச் சொன்னேன், ஆனா தேவையில்லாத வதந்திக்கு இடம் கொடுக்க வேணாம்னு சொல்லிட்டாங்க. பவித்ரா அவங்க வீட்ல தனியா தான் இருக்காங்க அதனால கீர்த்தி அவங்க கூட தங்க இடம் கொடுக்க முடியுமான்னு கேட்டேன் அவங்க சம்மதம் சொல்லிட்டாங்க. கீர்த்தி கிட்ட கேட்டேன் அவங்களும் சரினு சொல்லிட்டாங்க “ என்று ரஞ்சித் விளக்கம் அளித்தான். அதை கேட்டதும், ” நல்லது ரஞ்சித், அவங்களுக்கு தேவையானது எல்லாத்தையும் பார்த்து ஏற்பாடு பண்ணி கொடுத்துடு “ என்று ஆர்யன் சொன்னான்.
“எப்போ திரும்பி வருவீங்க ஆர்யன்?” என்று பிரதீப் கேட்க, ” நீங்க பிசினஸ் ஆரம்பிக்குறதுக்கு ரெண்டு நாள் முன்னாடி வந்துடுவோம் “ என்று பதில் சொன்ன ஆர்யன் இருவரையும் தீவிரமாகப் பார்த்து, ரஞ்சித், பிரதீப், நாங்க திரும்பி வரவரைக்கும் நாங்க இருக்க போற இடம் யாருக்கும் தெரியக்கூடாது. ரஞ்சித், அதுக்கு ஏத்த மாதிரி ஏற்பாடுகள செய்” என்று கூறினான்.
“கண்டிப்பா சார், நீங்க தனியார் ஜெட் விமானத்துல பாலி போயிட்டு அங்க இருந்து மாலத்தீவு போக வேற ஒரு ஜெட் ஏற்பாடு செய்றேன். மத்தவங்க கிட்ட நீங்க பாலி போய் இருக்கீங்கனு சொல்லுவோம். நீங்க மாலத்தீவுல இருக்க போறது யாருக்கும் தெரியாது.” என்று ரஞ்சித் திட்டத்தை கூறினான்.
பிரதீப் முன்னால் சாய்ந்து, “ மாயா அவளோட ரூம் வடிவமைக்க ஒரு டீம் அனுப்புறதா சொல்லி இருக்கா. நாளைக்கு அவளும் அவங்க கூட வரலாம் “ என்று பிரதீப் சொன்னதை கேட்ட ஆர்யன், “ரஞ்சித், ஒவ்வொருத்தரையும் நல்ல பரிசோதிச்சு பாரு, அவங்க ஆபீஸ் விட்டு போற வரை அவங்கள கண்காணி. மாயா அவளோட ரூம் தவிர வேற எங்கேயும் போக கூடாது “ என்று ஆர்யன் உறுதியாகக் கட்டளையிட்டான். பிறகு பிரதீப் பக்கம் திரும்பி, “பாதுகாப்பு வழிகாட்டுதல் எல்லாத்தையும் பின்பற்றனும்னு நீ மாயாகிட்ட தெளிவா சொல்லிடு “ என்று சொன்னான்.
“சரி ஆர்யன்” என்றான் பிரதீப் மரியாதையுடன் தலையசைத்து. அதன் பின்னர் ரஞ்சித்தும், பிரதீப்பும் அங்கிருந்து கிளம்பினர்.
DC தலைமை அலுவலகத்தில் மாயாதான் தந்தையின் அறைக்கு சென்று, “அப்பா, என்னோட ரூம் டிசைன் பண்ண ஒரு டீம் அனுப்புறதா பிரதீப் கிட்ட சொலி இருக்கேன் “ என்று சொன்னாள். அதற்கு அவர் உடனே, “நிச்சயமா, மாயா. உன் விருப்பப்படி செய் “ என்று சந்திரசேகர் பதிலளித்தார்.
“என் ரூம்ல என்ன நடக்குதுனு யாருக்கும் தெரிய கூடாது, எனக்கு முழுமையான தனியுரிமை வேணும். ஆர்யானோட எந்த ஒரு தொழில்நுட்பமும் என்ன கண்காணிக்க முடியாத வகையில டிசைன் பண்ண ஒரு டீம் அனுப்புங்க “ என்று மாயா சொன்னதை கேட்ட சந்திரசேகர் புருவத்தை உயர்த்தினார், ஆனால் வாதிடாமல், “ஹ்ம்ம். ராஜேஷ் கிட்ட தகவல் சொல்றேன். அவன் நீ சொல்ற மாதிரி எல்லா ஏற்பாடும் செய்வான் “ என்று சொன்னார்.
” நம்ம நிர்வாகியில ஒருத்தர் அனுபவம் வாய்ந்த ஹேக்கரா இருக்கனும். எனக்கு ஒரு பெண் நிர்வாகி வேணும், எனக்கு கீழ்படிஞ்சி, எந்தக் கேள்வியும் கேட்காம என் கட்டளைப்படி நடக்கனும் ” என்று சொல்லி கைகளைக் கட்டிக் கொண்டாள்.
“சரி மாயா, உனக்குத் தேவையான எல்லாத்தையும் ஏற்பாடு செய்ய ராஜேஷ் கிட்ட சொல்றேன் “ என்று ஆமோதித்தார் சந்திரசேகர்.
அடுத்த நாள் மாயாவும் அவளது குழுவினரும் ஏ.ஆர்.சி டவர்ஸுக்கு சென்ற போது ரஞ்சித் ஏற்கனவே அவர்களுக்காகக் காத்திருந்தான்.
“மிஸ் மாயா, ” என்று பணிவுடன் வரவேற்று, ” முன்னாடியே சொன்ன மாதிரி, உங்க ஆளுங்க உங்களுக்கு ஒதுக்கப்பட்ட ப்ளோர்ல (floor ) மட்டும் தான் அனுமதி இருக்கும். அதுக்கு வெளிய எதையும் தொட கூட யாருக்கும் அனுமதி இல்ல “ என்று ரஞ்சித் தெளிவாக கூறினான் ஆனால் மாயா அவனை பார்த்து, “ரஞ்சித், நீ திரும்பத் திரும்பச் சொல்றத நிறுத்திக்கோ, எனக்கு இங்க வேற எதுலையும் ஆர்வம் இல்ல “ என்று எரிச்சலுடன் பதில் சொன்னாள்.
“தேங்க்ஸ், நீங்க உங்க வேலைய பார்க்க போகலாம். ஏதாவது தேவைப்பட்டா உதவி செய்ய எங்க ஆட்கள் இருப்பாங்க. ஏதாவது பிரச்சனை வந்தா என்ன கூப்பிடலாம்.” என்று ரஞ்சித் சொன்னதும், சுற்றும் முற்றும் பார்த்த மாயா. ” என்னோட ஆளுங்க வேலைய முடிக்குற வரை நான் எங்க வெயிட் பண்றது ?” என்று கேட்டாள்.
“பிரதீப் கிட்ட கேட்குறேன் ” என்று ரஞ்சித் சொன்னான் ஆனால் மாயா அவனிடம், “நான் ஆர்யன சந்திக்க விரும்புறேன் ” என்று திடீரென்று சொன்னாள். ரஞ்சித் தலையசைத்து, “நான் செக் பண்றேன்” என்று சொல்லி ஆர்யனுக்கு டயல் செய்தான்.
சிறிது நேர உரையாடலுக்குப் பிறகு அவள் பக்கம் திரும்பி, “ஸாரி மிஸ் மாயா. சார் மீட்டிங்குல பிஸியா இருக்காரு, இப்போ உங்கள சந்திக்க முடியாது சொல்லிட்டாரு. நீங்க வேணும்னா பிரதீப் ரூம்ல வெயிட் பண்ணி அவர் கூட பிசினஸ் சம்மந்தமா பேசலாம் “ என்று சொன்னான்.
“சரி. வா போகலாம்” என்றாள் மாயா பெருமூச்சுடன்.
ரஞ்சித் தனது குழுவினருக்கு அறிவுறுத்தல்களை வழங்கிவிட்டு, மாயாவை பிரதீப்பின் தற்காலிக அறைக்கு அழைத்துச் சென்றான்.
“வெல்கம் மாயா” என்று அவளை உள்ளே வரவேற்ற பிரதீப், “ டீ, காபி இல்ல ஃப்ரெஷ் ஜூஸ் குடிக்குறீங்களா ?” என்று கேட்டான். அதற்கு மாயா, “தேங்க்ஸ், இப்ப வேண்டாம்” என்று மறுத்துவிட்டாள். சில நொடிகளுக்கு பிறகு, ” நான் சொன்னத நீங்க ஏத்துகிட்டு இருக்கணும் மிஸ்டர் பிரதீப். ஆர்யன் கிட்ட நீங்க வாங்கினத விட பத்து மடங்கு அதிகமாக நான் உங்களுக்கு கொடுத்திருப்பேன் “ என்று அவனிடம் சொன்னாள். அதற்கு பிரதீப் பதிலுக்கு புன்னகைத்தான்.
“உங்க சேர்வுமன் எங்க?” என்று கேட்டு சுற்றும் முற்றும் பார்த்தாள் மாயா அதற்கு பிரதீப், “அவங்க இன்னைக்கு ஆபீஸ் வரல “என்று அமைதியாக கூறினான்.
“ரொம்ப ப்ரொஃபஷனல். இப்படி ஒரு ஆள நம்பி பெரிய பிசினஸ் பண்றீங்களா?” என்று மாயா ஏளனம் செய்தாள்.
“வீட்ல இந்து வேலைய கையாளும் திறன் இருக்கும் போது ஆபீஸ்ல இருக்க வேண்டிய அவசியமில்லை. அது மட்டும் இல்ல நாம இன்னும் அதிகாரப்பூர்வமா பிசினஸ் ஆரம்பிக்கல “ என்று பிரதீப் விளக்கினான்.
“இந்த முடிவுக்காக ஆர்யன் நிச்சயம் வருத்தப்படுவாரு” என்று மாயா கசப்புடன் சொன்னதை கேட்டதும், “நிச்சயமா இல்லை, சஞ்சனா ஒரு அறிவார்ந்த தொழிலதிபர். ஆர்யன் கூட சேர்ந்து வேலை பண்ணி இருக்காங்க அதனால அவங்களோட அனுபவம் ஆர்யனுக்கு இணையா இருக்கும் “ என்று சொன்ன பிரதீப்பின் குரல் உறுதியாக இருந்தது.
“ரொம்ப புகழ்ச்சி. ஸ்டாப் இட் பிரதீப், நீ அவள உன் வாழ்க்கையில விரும்பினது எனக்குத் தெரியும். அப்புறம் எப்படி இவ்ளோ சுலபமா விட்டுக் கொடுக்க முடிஞ்சுது ?” என்று மாயா கேட்டதும், “ நான் அவள எப்பவும் லவ் பண்ணாதே இல்ல “ என்று தெளிவாக சொன்னான் பிரதீப்.
மாயா இருக்கையில் இருந்து முன்னால் சாய்ந்து, “ஆர்யன நேர்ல சந்திக்க ஒரு வழி சொல்லு ” என்று அவனிடம் கேட்டாள் அதற்கு அவன், “அது சாத்தியமில்லை, ஆர்யன சந்திக்க விரும்புறவங்க ரஞ்சித் மூலமா மட்டும் தான் போக முடியும் “ என்று சொன்னான்.
“பிரதீப், நான் உன்கிட்ட நேரடியா சொல்றேன். நான் இங்க பிசினஸ் செய்ய வரல. நான் ஆரியனுக்காக மட்டும் தான் இங்க வந்துருக்கேன். சஞ்சனாவ ஆர்யன் கிட்ட இருந்து பிரிக்க எனக்கு உதவி செய், பதிலுக்கு நீ எதையும் கேட்கலாம், அத நான் தரேன் ” என்று மாயா சொன்னதும் யோசித்த பிரதீப், “என்ன கொடுப்பீங்க மிஸ்?” என்று கண்கள் சுருங்க கேட்டான்.
“எதுவா இருந்தாலும் கேளு, நான் உனக்கு தருவேன் ” என்றாள் மாயா நம்பிக்கையுடன். அவள் வார்த்தையை கேட்டு புன்னகைத்த பிரதீப், “மாயா, இப்போ கொடுத்த வாக்குறுதிக்கு பின்னாடி வருத்தப்பட கூடாது ” என்று எச்சரித்தான்.
“ஷேர் வேணுமா? சொகுசு காரா? மாளிகைகளா? போதை மருந்து? பணம்? என்ன வேணும் ? ஆர்யனுக்காக எதுவும் தரேன் ” என்றவளின் குரலில் தீவிரம் தொனித்தது.
பிரதீப் தன் இருக்கையிலிருந்து எழுந்து அவளை நோக்கி மெதுவாக நடந்தான் அவளருகே குனிந்தான். அவன் முகம் அவளருகே இருக்க, “என்ன?” என்று மாயா திடுக்கிட்டுக் கேட்டாள்.
” நீ வேணும்னு சொல்லலாமா ?” என்று தாழ்ந்த குரலில் கேட்டான் பிரதீப்.
**************
முன்னோட்டம்:
” நான் லண்டன்ல இருந்து வாங்கிட்டு வந்தத போடுவியா மாட்டியா ? “

1 comment
[…] Chapter 57 […]