நித்திய இருள் அல்லது மாறாத ஒளியுடன் பூமியில் எந்த ஒரு இடமும் இருக்க முடியாது. உலகின் ஒவ்வொரு மூலையிலும் இரண்டின் தருணங்கள் எப்போதும் இருக்கும், இன்று தோல்வியின் நிழலில் நின்றவர் சந்திரசேகர் தான். ஒருமுறை வெல்ல முடியாத தொழிலதிபர், பிரபஞ்சத்தில் மிகவும் அவமானப்படுத்தப்பட்ட மனிதரைப் போல உணர்ந்தார். ஆர்யன் முன் வைக்கும் ஒவ்வொரு நிபந்தனையையும் ஏற்றுக்கொள்வதைத் தவிர அவருக்கு வேறு வழியில்லாமல் சிலந்தி வலையில் சிக்கிய பூச்சி போல சிக்கி தவித்தார். ஆர்யன் பேசிய வார்த்தைகள் அவன் சென்ற பின்னரும் நெடுநேரம் எதிரொலிக்கும் அளவுக்கு மிரட்டலுடன் இருந்தன.
தனது சாம்ராஜ்யத்தை உயர்த்துவதற்காக அவர் பின்னிய சூழ்ச்சிகள் மற்றும் வஞ்சகங்களின் வலை சந்திரசேகருக்கு மட்டுமே தெரியும், அப்படி அவர் கட்டிய சாம்ராஜ்யத்தை இழக்க நேரிடும் என்ற எண்ணம் அவரை கொன்றது ஆனால் அவ்வளவு எளிதில் விட்டுகொடுக்கும் மனிதரா அவர் ?
ஏறக்குறைய நள்ளிரவில், அவர் தனது வழக்கறிஞர்கள் மற்றும் ராஜேஷுடன் தனது பண்ணை வீட்டிற்கு சென்றார். ஆர்யனை சிக்க வைக்கக்கூடிய சட்ட அல்லது ஏதாவது ஒரு வழியை கண்டுபிடிக்க ஆசைப்பட்டார். அவர் அனுபவித்த அவமானம் ஒரு பேய் திரைப்படத்தின் ரீல் போல அவர் மனதில் மீண்டும் மீண்டும் ஓடியது. இப்போது ஆர்யன் மதித்து நடந்த ஒரே மனிதர் சந்திரசேகர் என்றால், ஒரு காலத்தில் வணிக உலகை அத்தனை மூர்க்கமாக ஆட்சி செய்த ஆர்யனின் தந்தையை ஒருவரும் எதிர்க்க துணிந்தது இல்லை. சந்திரசேகர் கூட அவர் முன் கைகட்டி வாய் பொத்தி நிற்கும் அளவிற்கு வணிக உலகத்தை கட்டி ஆண்டவர் ஆர்யனின் தந்தை. அந்த பழைய நினைவுகள் சந்திரசேகரை கொன்றது.
இப்போது, சந்திரசேகர் தொழில்துறையில் தனக்கென ஒரு சிம்மாசனத்தை செதுக்கியுள்ளார். அவர் சரணடையத் தயாராக இல்லை அதனால் உடனடியாக தனது நம்பிக்கைக்குரிய நபர்கள் அனைவரையும் அழைத்து, ஆர்யனின் கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் பற்றிய அனைத்து விவரங்களையும் சேகரிக்க உத்தரவிட்டார்.
ஆர்யனை சிக்க வைக்க எந்த வழியும் இல்லாமல் அந்த நீண்ட இரவு முடிவுக்கு வந்தது. அளவிட முடியாத விரக்தியில் சந்திரசேகர் குடிக்கத் தொடங்கினார். ராஜேஷை தவிர அனைவரும் ஒவ்வொருவராக பண்ணை வீட்டை விட்டு வெளியேறினர். தூக்கமில்லாத இரவு, அவமானத்தின் குத்தல், வணிக இழப்பு என அனைத்தும் அவருக்குள் கொதித்து, அது கோபமாக வெடித்தது, அதை அவர் இப்போது தனது மகளை நோக்கித் திருப்பினார். ராஜேஷிடம் தன்னை வீட்டிற்கு அழைத்துச் செல்லும்படி கூறினார்.
ஆர்யனின் மேன்ஷனில், லிவிங் அறை பூக்களால் அலங்கரிக்கப்பட்டு, சஞ்சுவின் சடங்குக்கான தயாரிப்புகளின் சலசலப்பால் நிரம்பியது. கீர்த்தி, பவி, பிரதீப் ஆகியோர் முன்னதாகவே வந்தனர். அனைத்து ஏற்பாடுகளிலும் பாலாவும், ரஞ்சித்தும் கௌசல்யாவுக்கு உதவி செய்தனர். ஆர்யன் எல்லாவற்றையும் சமாளிக்க முன்வந்தாலும், கௌசல்யா எல்லாவற்றையும் தானே செய்ய வேண்டும் என்று வற்புறுத்தினார், ஒவ்வொரு விஷயத்திலும் தனது தாய் அன்பைப் பொழிந்தார். பாலாவின் உதவியுடன் சஞ்சுவுக்கு பூக்கள், எளிமையான ஆனால் அழகான சேலை, வளையல்கள், மாலை வாங்கிக் கொடுத்தார். சடங்குக்காக விதவிதமான உணவுகளையும் அவர் தயாரித்தார்.
பின்னர், ஆர்யனையும் சஞ்சுவையும் கீழே அழைத்த கௌசல்யா, சேலையை சஞ்சுவிடம் கொடுத்தார். கீர்த்தி மற்றும் பவி ஆகியோர் சஞ்சுவுக்கு ஆடை அணிவிக்க உதவினார்கள். சில நொடிகளில் நீல நிற பட்டு புடவைல் ஜொலித்தபடி சஞ்சு இறங்கி வந்தாள். கொஞ்சமாக வளர்ந்திருந்த அவளது வயிறு மடிப்புகள் வழியாக எட்டிப் பார்த்தது. மல்லிகைப் பூக்கள் அவளது கூந்தலை அலங்கரித்தன. நளினமாக நடந்து நடுவில் அவளுக்காக போடப்பட்டிருந்த ஒற்றை இருக்கை சோபாவில் அமர்ந்தாள்.
ஆர்யன் திகைத்து நின்றான், அவன் கண்ணுக்கு அவள் தெய்வீகமாகத் தெரிந்தாள், தாய்மையால் பிரகாசித்தாள்.
கௌசல்யா, ஆர்யனிடம், ” அந்த மாலையை அவ கழுத்துல போடுங்க சார் “ என்று கூறினார்.
ஆர்யன் மெதுவாக சஞ்சுவுக்கு மாலை அணிவித்தான், அவன் கண்கள் அவளது ஒளிரும் முகத்தை விட்டு அகலவில்லை.
பின்னர் கௌசல்யா சடங்கைத் தொடங்கினார். சஞ்சுவின் கன்னங்களில் சந்தனம் பூசி, அவர் தயாரித்த பல வகையான சாதங்களையும், இனிப்பையும் சஞ்சுவுக்கு அவர் ஊட்டினார். பின்னர் மெதுவாக வளையல்களை சஞ்சுவின் கைகளில் அணிவித்தார். கீர்த்தி, பவி, ஆர்யன், ரஞ்சித், பிரதீப், பாலா ஆகியோர் ஒவ்வொருவராக சடங்கை செய்தனர். இறுதியாக கௌசல்யா ஆரத்தி எடுத்து சடங்கை நிறைவு செய்தார்.
இப்போது துடிப்பான வளையல்களால் அலங்கரிக்கப்பட்ட அவளது கைகளைப் பார்த்த சஞ்சு திருப்தியுடன் புன்னகைத்தாள். ரஞ்சித் நிறைய போடோக்களை எடுத்து அந்த அழகிய தருணத்தை பதிவு செய்தான். பின்னர் அனைவரும் சுவையான உணவைப் பகிர்ந்து கொண்டு ஓய்வெடுக்க உட்கார்ந்தனர்.
கீர்த்தி, பிரதீப்பை பார்த்து மௌனமாக அவர்களை சொல்லும்படி வற்புறுத்தினாள். அதை கவனித்த சஞ்சு, “ என்ன கீர்த்தி ? ஏதாவது சொல்லனுமா ? இப்போலாம் நீ ரொம்ப பிஸியா இருக்க போல ? “ என்று கேட்டாள்.
கீர்த்தி பதட்டத்துடன், “சஞ்சு… நான் ஒண்ணு சொல்லணும்.” என்று புன்னகைத்தாள்.
ஆர்யன் சேர்ந்து கொண்டு, “ உனக்கு கஷ்டமா இருந்தா பிரதீப் சொல்லட்டும். சரியா, பிரதீப்?” என்று கேட்டதும், பிரதீப் திகைத்துப் போனான்.
“ ஆர்யனுக்கு எப்படி தெரியாம இருக்கும் ? “ என்று நினைத்த பிரதீப், ஆழமாக மூச்சை இழுத்துவிட்டு, ” ஒரு உண்மைய சொல்லணும். நாங்க லவ் பண்றோம் “ என்று சட்டென கூறினான். அவன் சொன்னதை கேட்டதும் அறையில் சிரிப்பொலி எழுந்தது.
” ஒரு வழியா சொல்லிட்டீங்க, எவ்ளோ நாள் எங்கள வெயிட் பண்ண வெச்சுட்டீங்க ? “ என்று சொல்லி சஞ்சு கிண்டலடித்ததும், கீர்த்தி முகம் சுளித்து, ” இதுக்கு என்ன அர்த்தம்?” என்று கேட்டாள்.
” அப்படினா, எங்க எல்லாருக்கும் ஏற்கனவே தெரியும், இருந்தாலும் நீங்க சொல்றதுக்காக வெயிட் பண்ணிட்டு இருந்தோம். இப்போ உங்க ரெண்டு பேருக்காகவும் ரொம்ப சந்தோஷப்படுறோம் “ என்று சஞ்சு கூறியதும், அனைவரும் வாழ்த்தினர்.
கீர்த்தி சிரித்துக் கொண்டே, “ எனக்கு மட்டும் ஏன் வாழ்த்து சொல்றீங்க ? பவியையும் கேளுங்க “ என்று சொன்னாள். உடனே சஞ்சு அவள் பக்கம் திரும்பி, “ பவி, அண்ணா எப்போ வருவாரு?” என்று கேட்டாள்.
பவி கண்களை உருட்டியபடி, “ உனக்குத் தெரியாதது ஏதாவது இருக்கா சஞ்சு? “ என்று கேட்டாள்.
” மிசஸ் ஆர்யனா இருக்குறதுல நிறைய நன்மைகள் இருக்கு ” என்று சஞ்சு திருப்தியுடன் பதிலளித்தாள்.
” அய்யோ சஞ்சு !” என்று பவி வெட்கத்தோட சிரித்தாள்.
“ அப்போ சீக்கிரமே கல்யாணம் பார்க்க போறோம் “ என்று ஆர்யன் சொல்ல, உடனே கீர்த்தி குறுக்கிட்டு, “இல் அண்ணா, சஞ்சுவோட பிரசவத்துக்கு முன்னாடி கல்யாணம் பண்ற எண்ணம் இல்ல. எங்களுக்கும் கொஞ்ச நேரம் வேணும்!” என்று சொன்னாள். அதை கேட்ட ரஞ்சித், ” நல்லா என்ஜாய் பண்ணுங்க “ என்று சொல்லி சிரித்தான்.
சஞ்சு ரஞ்சித்தின் பக்கம் திரும்பி, “ரஞ்சித் அண்ணாவுக்கு இப்பவே ஒரு பொண்ணு தேடணும்.” என்று சொன்னாள் ஆனால் ரஞ்சித் கைகளை உயர்த்தி, ” அய்யோ வேண்டாம் மா! நான் இப்படியே நல்லா இருக்கேன் “ என்று கூறினான். அதற்கு சஞ்சு, “ அதெல்லாம் முடியாது, நீங்க மட்டும் ஏன் தனியா சிங்குலா இருக்கனும் ? “ என்று கேட்டாள்.
“ அதுக்கான நேரம் வரும்போது பார்த்துக்கலாம். இவங்கள மாதிரி எனக்கும் ஒரு பொண்ணு கிடைக்கும், இத பத்தி அப்போ பேசலாம் “ என்று ரஞ்சித் கூறியதும், சஞ்சு புருவத்தை உயர்த்தி, ” நீங்க எந்நேரமும் ஆர்யன் பின்னாடியே ஓடிட்டு இருந்தா எப்படி பொண்ணு கிடைக்கும் ? “ என்று கேட்டாள்.
“ என் கடமை தான் முதல்ல, மத்ததெல்லாம் அப்புறம் தான் “ என்று ரஞ்சித் உண்மையாக கூறியதை கேட்டு, “நான் சொல்றத நீங்க கேட்கவே மாட்டீங்க” என்று சஞ்சு உதட்டைப் பிதுக்கினாள்.
அரவணைப்பும், மகிழ்ச்சியும் நிறைந்த அந்த தருணம், சிரிப்பொலி அறையை நிறைத்தது. சஞ்சு மிகவும் ஆடை மாற்ற தனது அறைக்கு சென்றாள்.
அதே நாள் அன்று காலை DC குடியிருப்பில், சந்திரசேகர் கண்களில் ஆத்திரத்துடன் வீட்டுக்குள் புகுந்து, “மாயா” என்று அலறினார்.
மாடியில் மாயா திடுக்கிட்டு விழித்து கீழே விரைந்து சென்று பார்த்தபோது தன் தந்தை கோபத்தில் சிவந்திருந்தார், அவருடைய கண்கள் கோபத்தில் சிவந்திருந்தன.
“அப்பா? என்ன நடந்துச்சு ? ஏன் இவ்வளவு கோபம்?” என்று மாயா கேட்டதும், “நீ என்ன பண்ணி இருக்கனு உனக்குத் தெரியுமா ?” என்று கத்தினார்.
“இப்ப என்ன, அப்பா?” என்று மாயா குழப்பத்துடன் கேட்க, “ஆர்யன் நம்ம பார்ட்னர்ஷிப்பை கேன்சல் பண்ணிட்டான். நான் பிசினஸ் சொல்லிக் கொடுத்த ஒருத்தன் கிட்ட நான் தோற்று போயிட்டேன். உனக்காகத் தான் அவன வளர விட்டேன். நேத்து என் வாழ்க்கையோட ரொம்ப மோசமான நாள். என்ன ஒரு பிச்சைக்காரன் மாதிரி நெனச்சு உன்னோட 40% பங்குகள திருப்பிக் கொடுத்தான். நான் திவாலான மாதிரி நான் முதலீடு பண்ண பணத்த என்கிட்ட திருப்பிக் கொடுத்தான். உன்னை ஜெயிலுக்கு அனுப்பாம இருக்க நான் அவனுக்கு அந்த இடத்திலேயே 25 கோடி பணம் கொடுக்க வேண்டியிருந்துச்சு ” என்று சந்திரசேகர் வெடித்துச் சிதறினார்.
அவர் சொன்னதையெல்லாம் கேட்டு மாயாவின் கண்கள் விரிந்தன, அவள் அப்படியே உறைந்தாள்.
“நான் பல முறை உனக்கு சொன்னேன், உன்னோட தனிப்பட்ட விஷயத்த பிசினஸ்ல கொண்டு வர வேண்டாம்னு. நரேன் சொன்னது சரி தான். நான் அவன் பேச்ச கேட்டிருக்கனும். இப்போ ரெண்டு நாள்ல நீ கனடா போகணும். இனி ஆர்யன், சஞ்சனாவோட வாழ்க்கையில தலையிட கூடாது. புரிஞ்சுதா?” என்று சந்திரசேகர் கர்ஜித்தார்.
“நிறுத்துங்க அப்பா, என்னால கனடா போக முடியாது. நான் போக மாட்டேன்!” என்று மாயா மறுத்ததும், ” வாய மூடு, மாயா!” என்று ஆவேசமாக அலறியபடி சந்திரசேகர் ஒரு பூச்சாடியை எடுத்து அறையின் குறுக்கே வீசினார். அது சுவரில் மோதியதும், அந்தச் சத்தம் மாயாவை நடுங்க வைத்தது, அவள் உடல் நடுங்கி, மூச்சு வேகமெடுத்தது… திடீரென மயங்கி விழுந்தாள்.
“மாயா!” என்று அவளை நோக்கி விரைந்தபோது சந்திரசேகரின் குரல் உடைந்தது.
அவர் மண்டியிட்டு அவள் கன்னங்களைத் தட்டி அவளை எழுப்ப முயன்றார் ஆனால் அவள் மயக்கத்தில் இருந்தாள்.
“ராஜேஷ், உடனே டாக்டர கூப்பிடு ” என்று சொல்லிவிட்டு அவளைத் தன் கைகளில் ஏந்தி படுக்கைக்கு அழைத்துச் சென்று மெதுவாகக் கிடத்தினார்.
“மாயா, என்னை மன்னிச்சிடு மா, நான் அப்படி கத்தியிருக்கக் கூடாது. தயவு செஞ்சு எழுந்திரு பிரின்சஸ். இனிமே சத்தியமா உன்ன திட்ட மாட்டேன். கண்கள திற ” என்று சந்திரேசகர் உடைந்த குரலில் கெஞ்சினார் ஆனால் அவள் எழவில்லை.
டாக்டர் வேகமாக அங்கு வந்து அவளை பரிசொதிக்க் ஆரம்பித்ததும், சந்திரசேகர் வெளியே சென்றார்.
முப்பது நிமிடங்கள் கழித்து டாக்டர் வெளியே வந்ததும், “டாக்டர்… என் பொண்ணு எப்படி இருக்கா ?” என்று மூச்சிரைக்க கேட்டார் சந்திரசேகர்.
“அவங்க இப்போ கண் முழிச்சிட்டாங்க. நீங்க அவங்கள சந்திக்கலாம்.” என்று டாக்டர் சொல்ல, “ ஆனா அவளுக்கு என்ன ஆச்சு ? ” என்று அவசரமாகக் கேட்டார் சந்திரசேகர்.
“ திடீர்னு ரத்த அழுத்தம் அதிகமானதால அவங்க மயங்கி விழுந்து இருக்காங்க அதுவும் இல்லாம அவங்க கர்ப்பமா இருக்காங்க சார். முழு பரிசோதனைக்கு ஹாஸ்பிடல் கூட்டிட்டு வாங்க. செக் பண்ண அப்புறம் குழந்த எப்படி இருக்கு, எப்போ பிறக்கும்னு அப்போ தான் சொல்ல முடியும் “ என்று டாக்டர் சொன்னதும், சந்திரசேகர் உறைந்து போனார்.
ராஜேஷ் வேகமாக முன்னால் சென்று, டாக்டரிடம், “தயவு செஞ்சு அவங்க கர்ப்பம் பத்தி வேற யார்கிட்டையும் சொல்ல வேண்டாம்” என்று அறிவுறுத்தினான்.
அப்போது, மாயா தன் அறையை விட்டு வெளியே வந்தாள், அவள் கன்னங்களில் கண்ணீர் உருண்டோடியது.
சந்திரசேகர் அவள் பக்கம் திரும்பி, “மாயா… டாக்டர் என்ன சொல்றாரு ? அது உண்மை இல்லனு சொல்லு.” என்று சந்திரசேகர் சொல்ல, அவள் அழுதுகொண்டே இருந்தாள்.
” உன்கிட்ட தான் கேட்குறேன் மாயா, நான் உன்மேல கோவமா இல்ல, ப்ளீஸ் சொல்லு “ என்று சந்திரசேகர் மீண்டும் கேட்க, “அப்பா… இப்பத் தான் எனக்கும் தெரிய வந்துச்சு, என்ன மன்னிச்சிடுங்க ப்ளீஸ்…” என்று மாயா அழுதாள்.
” இந்த குழந்தைக்கு அப்பா யாரு மாயா?” என்று சந்திரசேகர் கேட்டதும், “ நான் சொன்னா நீங்க நம்புவீங்களா?” என்று தயக்கத்துடன் கேட்டாள்.
” மாயா, நான் எப்பவும் உன்ன நம்புவேன். நீ கேட்டது எல்லாம் செஞ்சு இருக்கேன். இப்ப சொல்லு ப்ளீஸ். அப்பா யாரு?” என்று கேட்டார்.
” விவான், ரியா, லேக்கா சொன்ன மாதிரி ஊட்டியில் நடந்தது கனவு இல்ல. அது உண்மையா நடந்துருக்கு. நான் பார்த்தது ஆர்யன் தான். எனக்குள்ள வளர்ந்துட்டு இருக்க குழந்தை… அவரோட குழந்த. அவர் இப்போ என்னை நிராகரிக்க மாட்டாரு. நான் குழந்தைய சுமக்கும் போது அவரால என்ன நிராகரிக்க முடியாது. ” என்று மாயா நினைத்துக் கொண்டிருக்க, சந்திரசேகர் அவளை வெறித்துப் பார்த்தபடி காத்திருந்தார்.
“அது… அது ஆர்யன் தான் குழந்தைக்கு அப்பா” என்றாள் மாயா.
*******************
முன்னோட்டம்:
” ரஞ்சித், இந்த அசிங்கம் புடிச்சவளோட அப்பாவ கூப்பிடு, நான் இவள கொல்றதுக்கு முன்னாடி வந்து கூட்டிட்டு போக சொல்லு “

1 comment
[…] Chapter 73 […]